
சென்னை,
சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025, மற்றும் சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது 'சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்' ''கூடுவோம், ஓடுவோம் கூட்டுறவால் உலகை வெல்வோம்'' என்ற கருப்பொருளை கொண்டு மினி மாரத்தான் சென்னை தீவுத்திடலில் 06-07-2025 அன்று காலை 05.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மினி மராத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். மினி மாரத்தான் தீவுத்திடலில் தொடங்கி வெற்றி போர் நினைவுச்சின்னம், அண்ணா சதுக்கம், விவேகானந்தர் இல்லம் வரை சென்று மீண்டும் அதே பாதையில் தீவுத்திடல் வந்தடையும் மொத்த தொலைவு 5 கி.மீ ஆகும். இப்போட்டியில் 18 வயது தொடங்கி 40 வயது உடையவர்கள், மேலும் 40 வயது முதல் அதற்கு மேல் 2000 க்கும் மேற்பட்ட முன்பதிவு செய்துகொண்ட நபர்கள் ஆண், பெண் என கலந்து கொள்ள உள்ளார்கள்.
ஆண்கள் பிரிவுக்கு முதல் பரிசாக -ரூ.30,000 இரண்டாம் பரிசாக -ரூ.20,000 மூன்றாம் பரிசாக - ரூ,10,000 வழங்கப்பட உள்ளது. பெண்கள் பிரிவுக்கு முதல் பரிசாக -ரூ.30,000 இரண்டாம் பரிசாக –ரூ.20,000 மூன்றாம் பரிசாக – ரூ.10,000 என வழங்கப்பட உள்ளது. பங்குபெற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பதிவிறக்கம் (Online download) செய்யும் வகையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான தனி ஏற்பாடுகள் தீவுத்திடலில் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி முன்னிலை வகிக்க உள்ளார்கள். அரசு முதன்மை செயலாளர், கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை சத்யபிரதசாகு, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் க.நந்தகுமார், கூடுதல் பதிவாளர் (நுகர்பு பணிகள்) ச.பா.அம்ரித், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், சீர்மிகு பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.