சென்னை: “சென்னை மாநகரில் “ஹேப்பி சண்டே” என்ற பெயரில் பல மணி நேரம் பிரதான சாலைகளில் போக்குவரத்து மிகுந்த நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கும் காவல் துறை, போக்குவரத்து குறைவான இரவு 10 மணிக்கு நடைபெறவிருந்த பாலின சமத்துவ நடைக்கு அனுமதி மறுத்ததோடு, காவல் துறை சொன்ன இடத்தில் நடத்திய உறுதி ஏற்பு நிகழ்வுக்கும் வழக்குப் பதிவு செய்வது அராஜகமான நடவடிக்கையாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தைகள், பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை, பாகுபாடு மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பிரச்சார இயக்கத்தை நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்ட குழு சார்பில் “இரவும் எமக்கானதே” என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி நவம்பர் 16 அன்று இரவு 10 மணிக்கு தந்தை பெரியார் சிலையிலிருந்து உழைப்பாளர் சிலை வரை “பாலின சமத்துவ நடை” நிகழ்வு இரண்டாவது ஆண்டாக நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கான அனுமதியை காவல்துறை நிகழ்வு நடைபெறும் நாளன்று மறுத்துவிட்டது.