
சென்னை,
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திக் (25 வயது). இவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இவர் பணிபுரிந்து வரும் நிறுவனத்துக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்ததாக தெரிகிறது. இந்த போட்டியில் கார்த்திக் பங்கேற்கவில்லை. அங்கு தனது நண்பர்கள் விளையாடும் அணியை ஊக்கப்படுத்தும் வகையில் மைதானத்தில் மிகவும் உற்சாகமாக, கோஷங்களை எழுப்பியபடி இருந்துள்ளார்.
போட்டியின் இறுதியில் அவர் ஆதரித்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்த கார்த்திக், கூச்சல் போட்டபடியே மைதானத்தை சுற்றி வந்து தனது மகிழ்ச்சியை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார். ஆரவாரத்தின் உச்சியில் இருந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் நண்பர்கள், அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.