சென்னையில் தேங்கிய மழை நீர் இரவோடு இரவாக வெளியேற்றம்: சைலன்டாக மாஸ்காட்டிய நீர்வளத்துறை அதிகாரிகள்

1 month ago 5

சென்னை: நீர் வழித்தடங்களை தூர்வாரி தயார் நிலையில் வைத்திருந்ததால் சென்னையில் தேங்கிய மழை நீர் இரவோடு இரவாக வெளியேறியுள்ளது. சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடந்த திங்கட்கிழமை பெய்த கனமழை தற்போது வரை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதோடு, பல சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. இடைவிடாமல் பெய்து வரும் இந்தக் கனமழையின் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது.

குறிப்பிட்ட இடைவெளியில் கன முதல் மிக கனமழையும் பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கிய படியே இருந்தது. வெள்ளம் வடிவதற்கு கால அவகாசமே இல்லாமல் தேங்கியபடியே இருந்தது. மழை நீரை வெளியேற்றும் பணியில் நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை பகலிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்ததால், மழைநீர் அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

ஆனால் நேற்று மாலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், நீர்வளத்துறை உட்பட அனைத்து துறை ஊழியர்களும் முழுவீச்சில் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சென்னையில் மழைநீர் தேங்கிய பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்தது. கிட்டத்தட்ட சென்னையில் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்குள் மழைநீர் அகற்றப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் சென்னையில் உள்ள நீர்வழித்தடங்களில் மழைக்கு முன்பே முறையாக தூர்வாரப்பட்டதால் இரவோடு இரவாக தண்ணீர் வடிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வடசென்னை பகுதி மக்கள் கூறியதாவது : 3 மாதங்களுக்கு முன்பு கொசஸ்தலையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் முகத்துவாரப்பகுதியில் தூர்வாரியதால் மட்டுமே வடசென்னை பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை. புழல் ஏரி திறக்கும் போது வெளியேறும் தண்ணீர் இந்த வழியாக கடலில் செல்லும். 20 ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன்படி முகத்துவார பகுதியில் தூரவாரப்பட்டு 1000 டன் மண் வெளியேற்றப்பட்டுள்ளது. கடந்தாண்டு வரை இந்த பகுதிகளில் மழை நீர் தேங்கி குடியிருப்புகளில் சூழ்ந்தது. ரயில்வே மேம்பாலத்தில் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கும். ஆனால் 20 செ.மீ. மழை பெய்தும் தூர்வாரப்பட்டால் ஒரு சொட்டு தண்ணீர் கூடி தேங்கவில்லை. மேலும் ஆர்.கே.நகர் வரை தூர்வாரப்பட்டால் எவ்வித தடையும் இன்றி செல்லும். இவ்வாறு அவர் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சென்னையில் தேங்கிய மழை நீர் இரவோடு இரவாக வெளியேற்றம்: சைலன்டாக மாஸ்காட்டிய நீர்வளத்துறை அதிகாரிகள் appeared first on Dinakaran.

Read Entire Article