சென்னையில் தூய்மைப் பணிக்கு 30 வாகனங்களை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா

6 hours ago 2

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து முழுவதுமாக சுத்தம் செய்யும் பணிக்காக 30 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 5,900 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடும் வகையில் அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள், கட்டடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றும் வகையில் டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 159 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு, கட்டடக் கழிவுகள் அகற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள பேருந்து சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 925 எண்ணிக்கையிலான பேருந்து நிழற்குடைகள் மற்றும் 173 எண்ணிக்கையிலான நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணிக்காக முதற்கட்டமாக மண்டலத்திற்கு இரண்டு வாகனங்கள் என்ற அடிப்படையில் உயர்அழுத்த பம்புகள் மற்றும் தண்ணீர் தொட்டி பொருத்தப்பட்ட 30 எண்ணிக்கையிலான வாகனங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீரினை பயன்படுத்தி நீர் தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தத் தூய்மைப் பணிக்காக சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் கழிவுநீரினை மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பாதசாரிகள் முழுமையான பாதுகாப்புடன் நடைபாதைகளை பயன்படுத்துகின்ற வகையிலும், பயணிகளின் வசதியினை மேம்படுத்துகின்ற வகையிலும் பேருந்து நிறுத்தங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் தூய்மையாகப் பராமரித்திடும் வகையில் சுழற்சி முறையில் நீர் தெளித்து சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருக்கும் வகையில் 30 எண்ணிக்கையிலான வாகனங்கள் மூலம் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகரினை தூய்மையாக வைப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் தூய்மைப் பணி நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார்,பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம் டாக்டர் கோ. சாந்தகுமாரி, தலைமைப் பொறியாளர் (பொது) திரு.கே.விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Read Entire Article