சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்... பக்தர்கள் தீபாராதனை காட்டி வழிபாடு

1 month ago 16

சென்னை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது, ஏழுமலையானின் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் தரப்பில் வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக சமர்ப்பணம் செய்வது வழக்கம். இந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் இந்த திருக்குடைகள் ஒப்படைக்கப்படும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து தொடங்கியது. கோவிலில் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த மேடையில் தொடக்க விழா நடைபெற்றது. திருக்குறுங்குடி ஜீயர் மடம், மடாதிபதி ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசி வழங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4 மணிக்கு கவுனி தாண்டியது. பின்னர், யானைக்கவுனி பாலம், சூளை நெடுஞ்சாலை, ஏ.பி.ரோடு, வடமலையான் தெரு, தாணா தெரு, செல்லப்பா தெரு வழியாக இரவு அயனாவரம் காசி விசுவநாதர் கோயிலை சென்றடைகிறது. ஊர்வல பாதை முழுவதும் ஏராளமான பக்தர்கள் திருக்குடைகளை கண்டு தரிசனம் செய்தனர். தீபாராதனை காட்டி வழிபாடு செய்து, திருக்குடைகளை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, நாளை சென்னை அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயில், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து 7-ம் தேதி திருமலையைச் சென்றடையும். பின்னர் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த ஆண்டு, இந்து தர்மார்த்த சமிதி, திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

Read Entire Article