
சென்னை,
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
தமிழகத்தில் கடந்த 40 மாதங்களாக நடைபெறும் திமுக-வின் காட்டாட்சி தர்பார் ஆட்சியில், அப்பாவி மக்களை வாட்டி வதைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது கொடுமையின் உச்சம். 27.9.2024 அன்று சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒருசில தீர்மானங்கள், சென்னை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கும் வகையில் அமைந்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு தீர்மானங்கள் மக்களை நேரடியாக பாதிக்கக் கூடியவைகளாகும்.
* ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு. (சொத்து வரி உயர்த்தப்படும்போதெல்லாம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வும் மறைமுகமாக உள்ளடங்கியுள்ளது.
* மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது. 'பூமியில் பிறந்த மனிதன் நிம்மதி பெறுவது அவன் அடக்கம் ஆகும் போதுதான், பெரும் துயரம் கொள்வது உடனிருந்தவர்கள் காலமாகும்போது' என்று மேலை நாட்டு அறிஞர் ஒருவர் மனித வாழ்க்கை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே 100 சதவீதம் மின்கட்டண உயர்வை அறிவித்ததுடன், ஆண்டுதோறும் மின் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்துள்ள ஸ்டானின் திமுக அரசு, ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வை அறிவித்து, சென்னை மாநகர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது.
இதன்மூலம் வரி, கழிவு நீர் அகற்றல் வரி என்று அனைத்து வரிகளும், சொத்து வரி உயர்வுக்கேற்ப தானாகவே உயர்த்தப்பட்டுவிடும். இத்துடன் குப்பைகள் அகற்றும் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் சொந்த வீடு, வணிக வளாகம் செய்பவர்கள் மட்டுமல்ல, வாடகைக்கு உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே விலைவாசி உயர்வால் தினசரி வாழ்க்கையையே தட்டுத் தடுமாறி நடத்திக்கொண்டிருக்கும் 90 சதவீத சாமான்ய மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்படும்.இன்றைய சென்னை மாநகராட்சியில் குண்டும் குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்களில் கலக்கும் கழிவு நீர், நேற்று முன்தினம் பெய்த 10 செ.மீ. மழைக்கே பல் இளிக்கும் மழைநீர் வடிகால் அமைப்பு, வெள்ள நீரால் நிரம்பி வழிந்த சாலைகள், மழை நீரால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ள பல மாநகராட்சி பூங்காக்கள் என்று காணப்படும் சென்னை மாநகராட்சி, இனி ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரியை அறிவித்துள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறப்பிற்குப் பின் நிம்மதியாக அடக்கம் செய்யப்படுவதை சேவையாகக் கருதி, அரசு மயானங்கள் தண்ணீர் வசதி, நவீன எரியூட்டுக் கூடம் போன்ற வசதிகளுடன், குறைந்த கட்டணத்தில் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இறப்பவர்களின் இறுதிச் சடங்குகளை குறைந்த கட்டணத்தில் குறித்த நேரத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், ஸ்டாலினின் திமுக அரசு, மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இச்செயல், இரக்கமற்ற கல் நெஞ்சு கொண்டவர்களிடம் அரசாங்கம் சிக்கி சீரழிவதைக் காட்டுகிறது. மேலும், மயானத் தொகை வரைவோலை (DD) மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உறவுகள் மறைந்த 3 துக்கத்தில் இருப்பவர்கள் வரைவோலை எடுக்க வங்கிக்கு போய் வரிசையில் நிற்க வேண்டும்; ஆன்லைனில் செலுத்த இ-சேவை மையத்தை நாட வேண்டும் என்பது திராவக மாடல் ஆட்சியாளர்களின் குரூர மனோபாவத்தை தோலுரித்துக் காட்டுகிறது.
சென்னை மாநகராட்சியில் ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வையும், மயான பூமியை தனியார் மயமாக்கும் தீர்மானத்தையும் உடனடியாக திரும்பப் பெறவும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிடவும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.