சென்னையில் சீறிப்பாய்ந்த சுகோய், தேஜஸ், ரபேல், ஜாகுவார் போர் விமானங்கள் வீர சாகசம்: மெரினா கடற்கரை குலுங்கியது

3 months ago 20

சென்னை: இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் நேற்று விண்ணதிர விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான 72 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் விண்ணில் பறந்து மக்களை பிரமிப்புக்கு உள்ளாக்கும் வகையில் சாகச நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டின. 21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இந்திய விமானப்படை சார்பில் நடத்தப்பட்ட சாகச நிகழ்ச்சி என்பதால், 15 லட்சம் மக்கள், மெரினா கடற்கரைக்கு திரண்டு வந்து, சாகசங்களை கண்டு வியப்படைந்தனர்.
மெரினாவில் நடந்த இந்த சாதனை நிகழ்ச்சியை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து கண்டு களித்ததால், இந்த சாதனை நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக டெல்லியில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் குறிப்பாக, உலகின் நீண்ட கடற்கரையில் ஒன்றான மெரினாவில் இந்த சாகச நிகழ்ச்சியை நடத்த இந்திய விமானப்படை திட்டமிட்டது. கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர், 2003ம் ஆண்டு தமிழகத்தில் இந்த போர் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது 2024ம் ஆண்டு பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடத்த இந்திய விமானப்படை திட்டமிட்டது. இதற்காக கடந்த 3 நாட்களாக ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பறந்து வந்து, சென்னையை திக்குமுக்காடச் செய்தன. இந்த ஒத்திகை நிகழ்ச்சியையும் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, போர்விமானங்களின் சாகச நிகழ்ச்சி நேற்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை காண காலை 9 மணி முதலே மெரினா கடற்கரையை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் வரத் தொடங்கினர். ரயில்கள், பேருந்துகள், ெமட்ரோ ரயில்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களில்் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர். கோயில் திருவிழாவுக்கு கூடும் கூட்டம் போல, சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரையில் குவிந்தனர். காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் அலை அலையாய் மெரினா கடற்கரையில் குவிந்தனர். சென்னை மட்டும் அல்லாது பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வருகை புரிந்தனர். இதுமட்டுமல்லாது, இந்த விமானப்படை வான் சாகசங்களை, ஈ.சி.ஆர் – கோவளம் கடற்கரையில் இருந்து INS அடையாறு வரை காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததால் ஆங்காங்கே கூட்டம் திரண்டு இருந்தது. மேலும் திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே இந்திய விமானப் படை வீரர்களின் மெய்சிலிர்க்கும் சாகச நிகழ்ச்சிகளை வியப்புடன் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்வை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் மெரினா கடற்கரை பந்தலுக்கு வந்திருந்தனர்.

இந்த பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய விமானப் படையின் சுகோய், தேஜஸ், ரபேல், ஜாகுவார் உள்ளிட்ட பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தின. இந்த விமானங்கள் வானில் பறந்துகொண்டே நமது நாட்டின் மூவர்ண கொடியில் உள்ள நிறத்தை நினைவூட்டும் வகையில் 3 வண்ணப் பொடிகளை வானில் தூவிக் கொண்டே சாகசங்களில் ஈடுபட்டன. குறிப்பாக, வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணம் அடித்து ஆச்சர்யப்படுத்திய ஆகாஷ் கங்கா அணி, “ஸ்கை டைவிங்” கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்திய சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபட்டு மெய்சிலிர்க்க வைத்த சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை சாகச அசத்தலில் ஈடுபட்டு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தன. முதலில் பாராசூட் சாகசத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் நடத்திய பாதுகாப்பு ஒத்திகைகளும், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான சாசகங்களும் நடத்திக் காட்டப்பட்டன. இதில் 2000 அடி உயரத்தில் இருந்து குதித்து வீரர்கள் சாகசம் நடத்தி அதிசயிக்க வைத்தனர். சாகச நிகழ்ச்சியின்போது சுகோய் விமானங்கள், சூர்யகிரண் விமானங்கள் வானில் தீபாவளி பட்டாசு போல் நெருப்பை கக்கிக் கொண்டு சென்று சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. சுகோய் விமானங்கள் இதய வடிவத்தை (ஹாட்டின்) வானில் போட்டது. அது போல் இரு விமானங்கள் ஹைபை கொடுத்தனர். மேலும் ஹேவார்டு ரக விமானங்களும் வானில் பறந்தன. இந்த விமானம் பாரம்பரியமானது. இது பல்லவா குழுமத்தை சேர்ந்த விமானமாகும். 1947 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை இந்திய விமான படையில் சிறப்பான சேவையாற்றியது. இந்த விமானம் 360 டிகிரிக்கு சுழன்று சுழன்று அடித்தது. குறிப்பாக, சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற விமானக் குழுக்களுக்கு சேரா, சோழா, பல்லவா, காவிரி, காஞ்சி, தனுஷ், மெரினா என தமிழில் பெயர் சூட்டப்பட்டு தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கப்பட்டது.

இந்த சாகசங்களை பொதுமக்கள் “வெச்ச கண் எடுக்காமல்” பார்க்க செய்தது வித்தியாசமாக இருந்தது. நெருப்புப் பந்துகளை வீசியபடியும் புகைகளை கக்கியபடியும் சீறிப்பாய்ந்தன விமானங்கள். சீறிப்பாய்ந்த விமானங்களை மக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இதேபோல் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் புகையை கக்கியப்படி மூவர்ணக் கொடியை வரைந்தும் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. தஞ்சையில் இருந்து புறப்பட்ட ரபேல் விமானங்கள் சென்னை மெரினா கடற்கரையை அலங்கரித்தன. பிரெஞ்சு விமான நிறுவனத்தின் தயாரிப்பான சேத்தக் ஹெலிகாப்டர்கள், பழமையான விமானமான டகோடா, அதிநவீன பயிற்சி விமானமான ஹார்வர்ட் என விமானங்களைக் கொண்டு வீரர்கள் அட்டகாசமான வான்வெளி சாகசத்தில் ஈடுபட்டு நிஜ ஹீரோக்களாக, சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்தனர். மேலும் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் ஹார்ட்டின்களை வரைந்தும் மக்களின் மனங்களை கவர்ந்தன. அதுமட்டுமின்றி எதிரெதிரே மோதுவது போல் சீறிய விமானங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. பலத்த சப்தத்துடன் மெரினா கடற்கரையை அதிர வைத்தன. வானில் குட்டிக்கரணம் அடித்தும், செங்குத்தாக உயர சென்றும், அதேவேகத்தில் தரையை நோக்கியும் வந்து பார்வையாளர்களை மிரட்டின.

இறுதியாக சி 17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் படையின் அணி வகுப்பு மக்களை வியப்பில் ஆழ்த்தியது. சூரியனை நோக்கி சீறிப்பாய்ந்த சூர்ய கிரண் விமானங்களின் சாகசம் பிரமிக்க வைத்தன. ஒரு பெரிய விமானம், அதனை தொடர்ந்து 9 சிறிய ரக விமானங்கள் வானில் வட்டமடித்தும், சிதறிச் சென்றும் சுழன்றும் கும்மாளம் செய்தன. புகையை வெளியிட்டபடி சுழன்று சுழன்று மூவர்ண கொடியை வரைந்து சாகசத்தில் ஈடுபட்டு மக்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தனர் விமானப்படை பைலட்டுகளும் கமாண்டர்களும். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் விமானங்களின் மிரட்டல் சாகத்தை மக்கள் கண்டுகளித்தனர். குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்புகளும் கொடுத்ததோடு, எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக நடந்து முடிந்து, மக்களின் பாராட்டை பெற்றுள்ளன. இதற்காக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

வானெங்கும் விமானப்படையின் சாகசம் மக்கள் கண்களுக்கு தெரிந்த வண்ணமாகவே இருந்தது. மக்கள், வெயில் காரணமாக குடைகளை பிடித்தபடி விமான சாகசத்தை கண்டு ரசித்தனர். கூட்ட நெரிசல் காரணமாக பலர் மயக்கமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. 90க்கும் மேற்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கூட்டத்தை ஒழுங்கு செய்யும் பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். வரலாற்றில் முக்கிய விமான சாகச நிகழ்ச்சியாக சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கருதப்படும் நிலையில், பல லட்சம் பேர் பார்வையிட்டதால் ‘லிம்கா’ சாதனை புத்தகத்தில் (Limca Book of Record) இந்த நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை நேரில் கண்டுகளித்த பொதுமக்களில் பலரும் “தாங்கள் முதல்முறை, அதுவும் நேரில் பார்த்தது மகிழ்ச்சி” என்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு தமிழ்நாடு அரசுக்கும், இந்திய விமானப்படைக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

The post சென்னையில் சீறிப்பாய்ந்த சுகோய், தேஜஸ், ரபேல், ஜாகுவார் போர் விமானங்கள் வீர சாகசம்: மெரினா கடற்கரை குலுங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article