* மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் மழைநீர் வடிந்தது
* மழையால் பாதிக்கப்பட்ட 7.18 லட்சம் பேருக்கு உணவு
* 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் * 95 சதவீதம் மழைநீரை அகற்றும் பணி நிறைவு
சென்னை: சென்னையை புரட்டி போட்ட கனமழையால், தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் மின்னல் வேகத்தில் செயல்பட்டதன் பலனாக 95 சதவீத மழைநீரை அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளது. தங்கள் நலனை பொருட்படுத்தாமல் முழுவீச்சில் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏரிக்குள் வீடுகட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியிருப்பது தெரியவந்துள்ளது. சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடந்த திங்கட்கிழமை பெய்ய ஆரம்பித்த கனமழை தற்போது வரை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதோடு, பல சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
இடைவிடாமல் பெய்து வரும் இந்தக் கனமழையின் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. குறிப்பிட்ட இடைவெளியில் கன முதல் மிக கனமழையும் பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வடசென்னை பகுதியில் பெரம்பூரில் பல இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தார்கள். புளியந்தோப்பு பட்டாளம் பகுதியிலும் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி இருந்தது. இதில் மக்கள் கடும் அவதி அடைந்தனர். அரும்பாக்கம் 100 அடி சாலையில் தேங்கி இருந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். பெரவள்ளூர் காவல் நிலைய வளாகத்துக்குள் தண்ணீர் சூழ்ந்தது.
பழைய வண்ணாரப்பேட்டையில் சில இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. தென்சென்னை பகுதிகளில் தியாகராயநகர், ஜி.என்.செட்டி சாலை சந்திப்பு, டி.என்.நாயர் சாலை, எம்எம்டிஏ காலனி, பசுல்லா சாலையில், தண்ணீர் பெரிய அளவில் பெருக்கெடுத்து ஓடியது. நுங்கம்பாக்கம் சூளைமேடு, பள்ளிசாலை, குளக்கரை சாலைகளில் தண்ணீர் பெருமளவு தேங்கியது. பள்ளிக்கரணை மேடவாக்கம் பிரதான சாலை, ஐ.சி.எப். ரயில்வே மேம்பாலத்தை ஒட்டிய பகுதிகள், திருவான்மியூர் எல்.பி. சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கந்தன்சாவடி பகுதி ஆகியவற்றிலும் மழை நீர் அதிகமாக தேங்கியது. பல இடங்களில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் பழுதாகி நின்றன. சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கிய படியே இருந்தது. வெள்ளம் வடிவதற்கு கால அவகாசமே இல்லாமல் தேங்கியபடியே இருந்தது.
மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பகலிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்ததால், மழைநீர் அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. ஆனால் நேற்று மாலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து துறை ஊழியர்களும் முழுவீச்சில் மழை நீரை அகற்றும் பணியில் இறங்கினர். இதனால் சென்னையில் மழைநீர் தேங்கிய பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்தது. குறிப்பாக, சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றினர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுத்தனர். கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டதன் பலனாக நேற்றிரவே முக்கிய சாலைகளில் மழைநீர் அகற்றப்பட்டது.
மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் எல்லாம் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை அகற்றும் பணியும் துரிதமாக நடைபெற்றது. இதனால் கிட்டத்தட்ட சென்னையில் பெரும்பாலான இடங்களில் நேற்று நள்ளிரவுக்குள் மழைநீர் அகற்றப்பட்டது. இந்நிலையில், இன்று காலை முதல் மழையின் தாக்கம் குறைந்தது. இதை தொடர்ந்து தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, மின்வாரியத் துறை என அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகின்றனர். இதன் பலனாக இன்று காலைக்குள் கிட்டதட்ட 95 சதவீத மழைநீர் அகற்றும் பணி நிறைவடைந்தது. இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதுவும் பள்ளிக்கரணை, அடையாறு, கூவம் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே இன்னும் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டியுள்ளது.
இப்பகுதி மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பகுதிகளில் மழைநீரை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதனால் எஞ்சிய 5 சதவீத பணிகளும் சில மணி நேரங்களில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைநீர் அகற்றும் பணி 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில், சென்னையில் மழைநீர் வடிந்து கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கைக்கு சென்னை மக்கள் திரும்ப தொடங்கியுள்ளனர். குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் முழுமையாக தண்ணீர் வடிந்தது. மீதமுள்ள 103 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மழைநீர் அகற்றும் பணியில் மின்னல் வேகத்தில் இரவு பகல் பாராமல் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மட்டுமல்லாது மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், போலீஸ் கமிஷனர் அருண், தீயணைப்புத்துறை இயக்குநர் ஆபாஷ்குமார், இணை இயக்குநர் சத்தியநாராயணன் மற்றும் அதிகாரிகள் கொட்டும் மழையில் பணிகளை தீவிரப்படுத்தினர். இதனால் மீட்பு பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றன. பெரும்பாலான இடங்களில் மழை விட்டதும் தண்ணீர் வடிந்து விட்டது. வடியாத இடங்களில் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டன. 30 செமீட்டருக்கு மேல் பெய்த மழை தண்ணீர் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் பெரிதும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால், கடந்த 2 நாட்களில் மட்டும் 54 மரங்கள் விழுந்தது. இந்த மரங்கள் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. மொத்தம் 300 நிவாரண முகாம்களில், 27 இடங்களில் 944 பேர் தங்கியுள்ளனர். சென்னை முழுவதும் நடைபெற்று வரும் 100 மருத்துவ முகாம்களில் 5,657 பேர் பயனடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் 7.18 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் கணேசபுரம் மற்றும் ஸ்டான்லி சுரங்கப்பாதைகள் தவிர, மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கம் இல்லை.
மாநிலம் முழுவதும் 1,293 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 77,877 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் முழுமையாக தண்ணீர் வடிந்தது. மீதமுள்ள 103 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவையும் விரைவில் முழுமையாக அகற்றப்படும். மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளில் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 95 சதவீத மழைநீரை அகற்றும் பணிகள் நிறைவடைந்து விட்டது. நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை: மின்னல் வேகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.