சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மோதலில் பதிவான வழக்குகள் எத்தனை?: விவரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

3 hours ago 1

சென்னை: சென்னையில் கடந்த பத்தாண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவன் சுந்தர், கடந்த அக்டோபர் 4ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு கடந்த அக்டோபர் 9ம் தேதி மாணவன் சுந்தர் மரணம் அடைந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஈஸ்வரன், ஈஸ்வர், யுவராஜ் மற்றும் சந்துரு ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாணவர்களின் பெற்றோர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

இந்நிலையில், வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது மாணவர்களின் பெற்றோர்கள் ஆஜராகி இருந்தனர். அப்போது ஆஜரான காவல்துறை வழக்கறிஞர் அருள்செல்வன், கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஒரு செமஸ்டருக்கு பத்துக்கும் குறைவான நாட்களே கல்லூரிக்கு சென்றுள்ளதாக கூறினார். மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென்று கோரினார்.

இதனையடுத்து, நீதிபதி, சிறையில் உள்ள மாணவர்கள் குறித்து மட்டும் கவலைப்படும் நீங்கள் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தை பற்றி ஏன் கவலைப்படவில்லை. வருகைப் பதிவேட்டை வைத்து பார்க்கும் போது அவர்கள் பொறுப்பான மாணவர்களாக தெரியவில்லை. இறந்த மாணவன் பில்லியனர் (கோடீஸ்வரன்) வீட்டு பையன் கிடையாது. சாதாரண கூலி வேலை செய்பவர் மகன். அதை உணர்வதற்காகவே பெற்றோர்களை ஆஜராக உத்தரவிட்டேன்.

கடந்த ஆண்டுகளில் வெறும் அடிதடி சம்பவமாக இருந்தது, தற்போது கொலை சம்பவமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நிச்சயம் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே, சென்னையில் கடந்த பத்தாண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் ரயில்வே போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவற்றின் நிலை, சமரசமானவை குறித்த விவரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

The post சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மோதலில் பதிவான வழக்குகள் எத்தனை?: விவரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article