சென்னை: ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜிடம் நேற்று வழங்கினார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜிடம் வழங்கினார்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், ஏப்ரல் 2025-ல் நடைபெற உள்ள எவரெஸ்ட் எக்ஸ்பெடிஷனில் (எவெரெஸ்ட் பயணம்) கலந்து கொள்ள உள்ள தமிழ்நாடு வீரர் ஆஷிஷ் ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், தோஹாவில் நடைபெற உள்ள வாள்சண்டை போட்டியில் கலந்து கொள்ள சரவணன் ரூ.1.40 லட்சத்திற்கான காசோலையும், பன்னாட்டு அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள ஷாச்சி சாய் ரூ.70 ஆயிரத்திற்கான காசோலையும், சைக்கிளிங் விளையாட்டு வீரர்களான நாத் லட்சுமிகாந்த் மற்றும் பிரதீப் ஆகிய இருவருக்கும் மொத்தம் ரூ.7,38,403 செலவில் அதிநவீன பந்தைய சைக்கிள்களையும் வழங்கினார்.
இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க விருதான அர்ஜூனா விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அபய் சிங் (ஸ்குவாஷ்), துளசிமதி முருகேசன் (பாரா பேட்மிண்டன்), நித்யா ஸ்ரீ சுமதி சிவன் (பாரா பேட்மிண்டன்) மற்றும் மனிஷா ராமதாஸ் (பாரா பேட்மிண்டன்) ஆகியோருக்கு தமிழ்நாடு துணை முதல்வர் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். மேலும் இன்றைய நிகழ்வில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி மற்றும் தேசிய அளவிலான கையுந்து போட்டி, இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய 68 வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தேசிய கூடைப்பந்து போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டின் 60வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post சென்னையில் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.