
சென்னை,
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது, கால் டாக்சி செயலிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (மார்ச் 19-ம் தேதி) போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "2013-ம் ஆண்டு தான் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது குறைந்தபட்ச தூரத்துக்கு ரூ.25-ம், கிலோ மீட்டருக்கு ரூ.12-ம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. இப்போது விலைவாசி பலமடங்கு ஏறிவிட்டது. அன்றைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.55-க்கு கிடைத்தது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102 ஆகிவிட்டது.
எனவே, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு 19-ந் தேதி (இன்று) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது. மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அண்ணா சாலை தாராப்பூர் டவர் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். இதில், அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன" என்று அவர் கூறினார்.