சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி மீது செல்போன் வீச்சு: நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு

1 month ago 9

சென்னை: சென்னையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசி தாக்கிய சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் வரவேற்புரை ஆற்றினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் எம்.கோவை சத்யன் நன்றி கூறினார்.

முன்னதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்இடி பதாகையை திறந்து வைத்தார். அப்போது, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கட்சி வளாகத்தில் கூடி இருந்தனர். எல்இடி பதாகையை குனிந்தபடி எடப்பாடி திறந்து வைத்து கொண்டிந்தார்.

அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், பழைய செல்போனை திடீரென எடப்பாடி பழனிசாமி மீது வீசினார். அந்த செல்போன் எடப்பாடி பழனிசாமியின் காதில் பட்டு கீழே விழுந்தது. இதனால் எடப்பாடி பதற்றம் அடைந்தார். இந்த சம்பவத்தால் அதிமுக அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த தலைவர்கள் எடப்பாடியை உடனடியாக கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

பின்னர் எடப்பாடி மீது செல்போனை தூக்கி வீசிய நபர் குறித்து விசாரணையில் இறங்கினர். ஆனால் உடனடியாக அவர் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த வீடியோ காட்சியை வைத்து, எடப்பாடி பழனிசாமி மீது யார் செல்போன் வீசினார்கள் என்று அதிமுக நிர்வாகிகள் விசாரித்து வருகிறார்கள். அதேநேரம் பொதுச்செயலாளர் மீது வேண்டுமென்றே யாரும் செல்போன் வீசவில்லை, ெதாண்டர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலில் மற்றொரு நபர் வேகமாக கையை தூக்கியதால், கைபட்டு செல்போன் தவறி விழுந்துவிட்டதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

ஆனால், எடப்பாடி மீது செல்போன் வீசிய வீடியோ காட்சிகள் சமூகவலைத் தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சியை பார்க்கும்போது, எடப்பாடியை சுற்றி பெரிய அளவில் கூட்டம் இல்லை. ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தள்ளிதான் நிற்கிறார்கள். இதை வைத்து பார்க்கும்போது, எடப்பாடியை குறி வைத்து யாரோ வேண்டுமென்றே செல்போன் வீசியதாகவே தெரிகிறது. இதுகுறித்தும் அதிமுக நிர்வாகிகள் விசாரித்து வருகிறார்கள்.

* 15 சதவீத வாக்குகளை அதிமுக இழந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி வேதனை ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் தமிழகத்தில் அதிமுகவுக்கு 40 சதவீத வாக்குகள் இருந்தன. தற்போது 10 முதல் 15 சதவீத வாக்குகளை அதிமுக இழந்து இருக்கிறது.

வயது முதிர்ந்த தொண்டர்களின் இறப்பால்தான் வாக்குகளை இழந்திருக்கிறோம். இழந்த வாக்குகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பணியாற்ற வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் இளைஞர்கள் வாக்குகள் 40 சதவீதம் உள்ளன. அவர்கள் மத்தியிலும், முதல் தலைமுறை வாக்காளர்களிடமும் அதிமுக கட்சியின் செயல்பாடுகளை எடுத்து சொல்லுங்கள்.

முகநூல், எக்ஸ்தளம், இன்ஸ்டாகிராம் வலைத்தளங்களில் இளைஞர்களின் விருப்பம் அறிந்து அதற்கு ஏற்றவாறு கருத்துகளை பதிவிட வேண்டும். நமது கருத்துகளை யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் பதிவிட வேண்டும். சமூக வலைத்தள பதிவுகளை லட்சக்கணக்கானவர்கள் பார்க்கிறார்கள். அதை வைத்து நாம் ஆட்சி அமைக்க உழைக்க வேண்டும். எவ்வளவு வேகமாக செயல்படுகிறீர்களோ அதற்கான பலன் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி மீது செல்போன் வீச்சு: நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article