சென்னை,
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடைகளை அணிந்து, தங்கள் குடும்பத்தினரோடு பல விதமான பட்டாசுகளை வெடித்து பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையின்போது மாநகராட்சி பகுதிகளில் சேர்ந்த பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதன்படி தீபாவளி பண்டிகையின்போது 275 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 3 நாட்களில் 319.26 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் 10.13 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 10-வது மண்டலமான கோடம்பாக்கத்தில் 31.50 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.