காங்கிரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு - சித்தராமையா

2 hours ago 1

சோலாப்பூர்,

மராட்டியத்தில் வருகிற 20-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி இந்த மாத தொடக்கத்தில் மராட்டியத்தில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பேசும்போது, கர்நாடகாவில் மக்களிடம் கொள்ளையடித்து, அந்த நிதியை மராட்டிய தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது என்று பேசினார்.

இந்நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மராட்டியத்தின் சோலாப்பூர் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, பிரதமர் மோடி வருகிறார். பொய்களை கூறி விட்டு செல்கிறார். அவர் குற்றச்சாட்டுகளை உண்மை என நிரூபிக்க முடியுமென்றால், அரசியலில் இருந்து ஓய்வு முடிவை நான் அறிவிப்பேன்.

என்னுடைய சவாலை மோடி ஏன் ஏற்கவில்லை? எதற்கு அவர் அச்சப்படுகிறார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து அவர் கூறும்போது, பா.ஜ.க. தலைவர்களும், மந்திரிகளும் உண்மையை சரிபார்க்க கர்நாடகாவுக்கு வரட்டும்.

அவர்கள் தவறு நடந்துள்ளது என நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். ஆனால் நான் கூறுவது சரியென்றால், மராட்டிய மக்களிடம் அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடுவார்களா? என்றும் கேட்டுள்ளார்.

Read Entire Article