சென்னையில் 2-வது நாளாக தொடர்ந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

4 hours ago 1

சென்னை,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் முக்கிய சுற்றுலா பகுதியான பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பலியானார்கள்.  இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் இந்திய ராணுவம் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவின் முக்கிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் சார்பில் 244 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்த முடிவானது.

இவற்றில் சென்னையில் உள்ள கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன. அந்த பகுதிகளில் நேற்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

இந்தியாவில் கடைசியாக கடந்த 1971-ம் ஆண்டு போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் நேற்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. நேற்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடந்த இந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையின்போது மின்சாரம் துண்டிப்பு, இணைய சேவை துண்டிப்பு, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

குறிப்பாக வான்வழி தாக்குதலின்போது ஒலிக்கப்படும் சைரன் ஒலியை எழுப்பியும் போர் ஒத்திகை நடைபெற்றது. மேலும், சில பொது இடங்களுக்கான அனுமதி தடை செய்யப்பட்டும் ஒத்திகை நடைபெற்றது.

போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்து இருந்தது. இதன்படி, சென்னையில் 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. சென்னையில் அணுமின் நிலையம் தாக்கப்பட்டால் அவற்றை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றி ஒத்திகை நடந்தது. மாவட்ட கலெக்டர், பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள், வீரர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

இதன்படி மின் விளக்குகளை அணைத்தும், மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியும் ஒத்திகை பார்க்கப்பட்டது. இதில், பல்வேறு துறைகளை சேர்ந்த வீரர்கள், மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர். போர்ச்சூழலின்போது, எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி மக்களுக்கு செயல் விளக்கம் தரப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று 2-வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை தொடர்ந்தது. இதன்படி, 3 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை இன்று நடந்து வருகிறது. சென்னை விமான நிலையம், மணலி சிபிசிஎல், எண்ணூர் துறைமுகத்தில் ஒத்திகை நடைபெற்று வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, நடந்து வரும் இந்த ஒத்திகையில், ஆபத்து காலத்தில் எப்படி செயல்பட வேண்டுமென விளக்கம் தரப்படுகிறது. சைரன் ஒலியை எழுப்பியும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Read Entire Article