சென்னையிலிருந்து விமானத்தில் இலங்கை தப்பினார்களா பஹல்காம் தீவிரவாதிகள்? மர்ம இ-மெயிலால் பரபரப்பு கொழும்புவில் அதிரடி சோதனை

1 week ago 3

கொழும்பு: சென்னையில் இருந்து கொழும்புக்கு சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட 6 தீவிரவாதிகள் பயணிப்பதாக, சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு மர்ம இ-மெயில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை கண்டறிய தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரிக்கிறது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 3 தீவிரவாதிகள் உட்பட 7 பேர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.26 மணிக்கு 229 பயணிகளுடன் இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், காலை 11 மணி அளவில், சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம இ-மெயில் வந்தது. அதில், சென்னையில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 தீவிரவாதிகள் பயணம் செய்வதாகவும், அவர்களிடம் வெடிகுண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்களும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து, கொழும்பு விமான நிலையத்திற்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கொழும்பு விமான நிலையத்தில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று பகல் 11.59 மணியளவில் இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பாதுகாப்பு படையினர், அதிரடி படையினர், விமானத்தை சுற்றி வளைத்து தீவிர சோதனைகள் நடத்தினர்.

அதோடு பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சோதனை நடத்தி, அவர்கள் யார், எதற்காக இந்த விமானத்தில் பயணம் செய்கின்றனர் என்பது பற்றியும் முழுமையாக கேட்டு அறிந்தனர். முழுமையாக சோதனை நடத்திய போது, அதில் தீவிரவாதிகள் யாரும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலைய இயக்குனருக்கு வந்த மர்ம மிரட்டல் இ-மெயில், வழக்கமாக சென்னை விமான நிலையத்திற்கு, அவ்வப்போது வரும் மெயில் போன்றதுதான்.

அதில் உண்மை எதுவும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. இந்த திடீர் சோதனை காரணமாக இலங்கையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தாமதமானது. இதற்கிடையே இந்த மர்ம இ-மெயில் குறித்து, சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, போலி இ-மெயிலை அனுப்பி, பரபரப்பை ஏற்படுத்திய மர்ம கும்பல் குறித்து, விசாரணை நடத்துகின்றனர். அதோடு சென்னை மாநகர சைபர் க்ரைம் பிராஞ்ச் போலீசும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* பஹல்காம் பகுதியில் சீன ஸ்மார்ட் போன் பயன்படுத்தியது கண்டுபிடிப்பு
பஹல்காம் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த சாட்சியங்களின்படி தாக்குதலில் 5 பேர் ஈடுபட்டுள்ளனர் என தெரிகிறது. ஜம்மு காஷ்மீர் போலீசார் சந்தேக நபர்களின் 3 பேரின் வரைபடங்களை வெளியிட்டுள்ளனர். அவர்களை பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தாக்குதல் நடந்த போது பஹல்காம் பகுதியில் சீனாவின் ஹூவாய் நிறுவன ஸ்மார்ட் போன் ஒன்று செயல்பாட்டில் இருந்துள்ளது மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ ஆகிய ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சீன ஸ்மார்ட் போன் இந்தியாவிற்குள் எப்படி கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.இந்த ஸ்மார்ட் போனுக்கும் அதன் வெளிநாட்டு தொடர்பை கண்டுபிடிக்க மேற்கத்திய நாடுகளின் நிபுணர்களின் உதவியை என்ஐஏ கேட்டுள்ளது.

The post சென்னையிலிருந்து விமானத்தில் இலங்கை தப்பினார்களா பஹல்காம் தீவிரவாதிகள்? மர்ம இ-மெயிலால் பரபரப்பு கொழும்புவில் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article