சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!

3 months ago 26
சென்னையில் 2 மணி நேரமாக நடைபெற்ற விமானப்படையின் சாகச நிகழ்ச்சி இந்திய விமானப்படையின் வலிமையை பறை சாற்றியது. மக்களின் இதயங்களை வென்றெடுத்த நிகழ்வின் தொகுப்பு இது... விமானப்படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னையில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியை காண கொளுத்தும் வெயிலில் லட்சக்கணக்கானோர் குடைகளுடன் கடற்கரையில் திரண்டனர். முதல் நிகழ்ச்சியாக மெரினா கடற்கரையில் பாராசூட்களின் உதவியுடன் விமானப்படையின் ஆகாச கங்கை குழு ஹெலிகாப்டர்களில் இருந்து தரை இறங்கியது . மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் வானில் இருந்து தரையை நோக்கி வந்து வீரர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர்களில் இருந்து கயிறு மூலம் தரையிறங்கி பிணைக்கைதியை மீட்பது போல் வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர். பின்னர், அதிவேகத்தில் மின்னல் போல விமானப்படையின் ரபேல் விமானம் வானில் சீறி பாய்ந்தது. சென்னை வான் பரப்பை முதல் முறையாக கடந்த ரபேல் விமானத்தை கண்டு மக்கள் ஆர்ப்பரித்தனர். 4 சேட்டக் வகை ஹெலிகாப்டர்கள் 'தலைகீழ் ஒய்' வடிவில் துவாஜ் அணிவகுப்பு நடத்தியது. பழமையான விமானமான டகோடா மற்றும் இரண்டு பி.சி. -7 விமானங்கள் சாகசம் நிகழ்த்தி 'சேரா' அணிவகுப்பை நடத்தின. உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட மற்றொரு பழமையான ஹார்வார்ட் விமானம் வானில் வட்டமிட்டும், குறைந்த உயரத்தில் பறந்தும் சாகசம் நிகழ்த்தியது. இதையடுத்து, சி-295, டோர்னியர் 228, மிரேஜ் - 2000 உள்ளிட்ட விமானங்கள் வானில் பல்வேறு வடிவங்களில் அணிவகுத்தன. வான்வழி முன்னறிவிப்பு மற்றும் கட்டுப்பாட்டு விமானம், பி - 8 ஐ உள்ளிட்ட கண்காணிப்பு விமானங்கள் வானில் அணிவகுத்ததை கண்டு மக்கள் ஆர்ப்பரித்தனர். ஜாகுவார் விமானங்களைத் தொடர்ந்து, இலகு ரக தேஜஸ் விமானங்களும் வானில் வரிசையாக அணிவகுத்தன. விமானப்படையின் சுகோய் - 30 எம்.கே.ஐ. போர் விமானம், செங்குத்தாகவும், தலைகீழாகவும், சுழன்று வானில் ஜாலம் நிகழ்த்தியது. இதனை தொடர்ந்து உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானமும் சென்னை வான்பரப்பை மிரள வைத்தது. விமானப்படையின் வான் சாகச குழுவான சாரங்கை சேர்ந்த ஹெலிகாப்டர்கள், ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், பல்வேறு திசைகளிலும் பறந்தும் வானில் வலம் வந்தன. காற்றை கிழித்தப்படி சீறிப்பாய்ந்த சூர்யகிரண் குழுவினரின் விமானங்கள், இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தை வானில் புகையால் வரைந்தன. எம்.கே.1 ஹெலிகாப்டர்கள், ஹாக் ரக விமானங்கள் வான் பரப்பில் இதய வடிவத்தில் புகையால் வரைந்ததை கண்டு மக்கள் ஆர்ப்பரித்தனர். சென்னை வான் சாகச நிகழ்ச்சி அதிகளவிலான மக்களின் கண் முன் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்றது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Read Entire Article