சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்; தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு – தென் கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு – வடகிழக்கில் 320 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரு மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கு – நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே கரையை கடக்க கூடும் என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார். இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை நீடிக்கும் என்று அவர் கூறினார்.
சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டும் மழை பெய்யாதது குறித்து விளக்கம் அளித்த பாலச்சந்திரன், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரைக்கு அருகே வரும் போது மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார். வட தமிழகம் – தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளிலும், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கை வங்கக்கடல் பகுதியிலும் மணிக்கு 40 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு 18ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் அறிவுறுத்தினார்.
The post சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்தும் மழை பெய்யாதது ஏன்?: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் appeared first on Dinakaran.