சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டி மும்பை அணி அபார வெற்றி

1 hour ago 1

மும்பை: சென்னைக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 38வது லீக் போட்டி மும்பையில் நேற்று நடந்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணியின் துவக்க வீரர்களாக ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். வழக்கம் போல் சொதப்பலாக ஆடிய ரச்சின் 5 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார்.

பின் வந்த, சென்னை அணியின் புதிய இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 பந்துகளை சந்தித்த அவர் 2 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 32 ரன் குவித்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து, 8வது ஓவரின் கடைசி பந்தில் ரஷீத் (19 ரன்) ஆட்டமிழந்தார். அதையடுத்து, ரவீந்திர ஜடேஜாவும், சிவம் துாபேவும் இணை சேர்ந்து ஆடினர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால், 13.3 ஓவரில் சென்னை அணி, 100 ரன்னை எட்டியது.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய துாபே, ஜடேஜா, 38 பந்துகளில் 50 ரன்களை கடந்தனர். இந்நிலையில், பும்ரா வீசிய 17வது ஓவரை எதிர்கொண்ட துாபே (32 பந்து, 4 சிக்சர், 2 பவுண்டரி, 50 ரன்), ஜேக்சிடம் கேட்ச் தந்து அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அதையடுத்து, ஜடேஜாவுடன், கேப்டன் எம்.எஸ்.தோனி இணை சேர்ந்தார். பும்ரா வீசிய 19வது ஓவரின் 4வது பந்தில் தோனி (4 ரன்) அவுட்டாகி வெளியேறினார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 53 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை தரப்பில், ஜஸ்பிரித் பும்ரா 2, தீபக் சஹர், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 15.4 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, 177 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிபெற்றது.

The post சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டி மும்பை அணி அபார வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article