சென்னை: சிங்கப்பூரில் நடந்த வேர்ல்டு செஸ் சாம்பியன் ஷிப் தொடரின் 14வது போட்டியில், சீனாவின் டிங் லாரனை வென்று, உலக சாம்பியன் என்ற பட்டத்தை இந்திய வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் பெற்றார். இவர் நேற்று காலை 10.50 மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தார். தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு துறை ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் தலைமையில் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, குகேஷ், அளித்த பேட்டி: உலக செஸ் சாம்பியனானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சிறப்பான வரவேற்பை விமான நிலையத்தில் எனக்கு அளித்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு நன்றி. தமிழ்நாடு அரசு சென்னையில் செஸ் விளையாட்டு கிராண்ட் மாஸ்டர் போட்டிகளை நடத்தியது, எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த வெற்றிக்கு சென்னையில் நடந்த போட்டிகளில் நான் பெற்ற பயிற்சியும் ஒரு காரணம் என்று கூறலாம்.
மேலும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், என்னுடன் மோதிய அனைத்து வீரர்களுமே நன்றாக விளையாட்டினார்கள். ஆனாலும், சிறப்பாக விளையாடி, நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது சென்னை விமான நிலையத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்ததால் குகேஷ் விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தபோது, கூட்டத்தினர் இடையே பெரும் அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கூச்சல் குழப்பம் உருவாகியது. இதனால் ஊடகங்கள் புகைப்பட கலைஞர்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் எடுக்க முடியாமல் கீழே பிடித்து தள்ளப்பட்ட நிலை உருவாகியது. இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
The post சென்னை விமான நிலையத்தில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு: தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் ஏற்பாடு appeared first on Dinakaran.