சென்னை வான் சாகசம்: முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தவில்லை - ஜெயகுமார் விமர்சனம்

1 month ago 8

சென்னை,

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.இதனிடையே, இன்று ஞாயிற்று கிழமை என்பதால் மெரினாவில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

ஆனால், விமானப்படை சாகச நிகழ்ச்சி நிறைவடைந்த உடன் மக்கள் வீடு திரும்ப முயற்சித்தனர். லட்ச கணக்கில் மக்கள் வீடுகளுக்கு திரும்ப முயற்சித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மெரினா கடற்கரை சாலை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறநகர் ரெயில்களும் குறைவான அளவில் இயக்கப்பட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த நிலையில், முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தவில்லை என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.

குடிநீர்,உணவு, தற்காலிக கழிப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை.ரெயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார்.

காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது. நிர்வாகம், கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதல்-அமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார். என தெரிவித்துள்ளார்.

Read Entire Article