சென்னை வந்தார் மத்திய மந்திரி அமித்ஷா: நாளை முக்கிய ஆலோசனை

1 week ago 4

சென்னை,

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கடந்த மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் தமிழகத்தின் புதிய பா.ஜ.க. தலைவருக்கான போட்டியில் அண்ணாமலை தான் இல்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார். இதன் பிறகு, புதிய தலைவர் யார் என பல பேரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால் புதிய மாநில தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுதும் உள்ள தொண்டர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இருந்து அமித்ஷா தனி விமானம் மூலம் தற்போது சென்னை வந்தடைந்தார். அவரை மத்திய இணை மந்திரி எல்.முருகன், சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட 35 நிர்வாகிகள் வரவேற்றனர்..

பின்னர் கார் மூலமாக கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அமித்ஷா சென்றார். இன்றைய தினம் இரவு ஓட்டலிலேயே தங்குகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) தமிழக பா.ஜனதாவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து மாநில தலைவர் நியமனம் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனுக்களை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article