சென்னை: வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை

5 hours ago 1

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் இந்திரஜித் சிங் (33 வயது). இவர், தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை இவர், அமைந்தகரையில் உள்ள தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சென்றார். அவர் 3-வது மாடியில் உள்ள கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். பின்னர் அதற்கு பில் போடுவதற்காக காத்திருந்தார். திடீரென இந்திரஜித் சிங், தனது காலணியை கழற்றி வைத்துவிட்டு, ஓடிச்சென்று வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இந்திரஜித் சிங்கை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான இந்திரஜித் சிங் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்திரஜித் சிங்கிற்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. எனவே குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read Entire Article