சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

1 month ago 10

சென்னை: சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சியை(ஏர் ஷோ) காண மெரினா கடற்கரை பகுதியில் குடும்பம் குடும்பங்களாக 15 லட்சம் பேர் குவிந்ததால் சென்னையே குலுங்கியது. வர்ண ஜாலங்களுடன் சீறிப்பாய்ந்த போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை மக்கள் கரகோஷத்துடன் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது.

இந்திய விமானப்படையின் 92வது தின நிறுவன நாள் வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்திய விமானப்படை சார்பில் ‘வான் சாகச’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் வீரத்தை பரைசாற்றும் வகையில் வான் சாகச நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் விமானப்படையின் வலிமை மற்றும் சாகசத்தை பார்க்கும் வகையில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்திய விமானப்படை, வான் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

பொதுமக்கள் எளிமையாக கண்டு ரசிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர காவல்துறை இணைந்து செய்துள்ளது. இந்த சாகச நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இன்று காலை முதலே மெரினா கடற்கரைக்கு வந்தனர்.

வேளச்சேரி – சிந்தாதிரிப்பேட்டை இடையே போதிய ரயில்கள் இயக்கப்படாததால் ரயில்களில் பலர் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். சிலர் ரயில் தண்டவாளங்களிலேயே நடந்து சென்றனர். மெட்ரோ ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சாலைபோக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வான் சாகச நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகும் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்ததாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article