சென்னை: சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் (48), திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34), கொருக்குப்பேட்டை ஜான் (56), தினேஷ் (37), மரக்காணத்தைச் சேர்ந்த மணி (37) ஆகியோர் உயிரிழந்தனர். 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாகவும், 40 ஆம்புலன்ஸ்கள் மூலம் 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சியை(ஏர் ஷோ) காண மெரினா கடற்கரை பகுதியில் குடும்பம் குடும்பங்களாக 15 லட்சம் பேர் குவிந்ததால் சென்னையே குலுங்கியது. வர்ண ஜாலங்களுடன் சீறிப்பாய்ந்த போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை மக்கள் கரகோஷத்துடன் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது.
இந்திய விமானப்படையின் 92வது தின நிறுவன நாள் வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்திய விமானப்படை சார்பில் ‘வான் சாகச’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் வீரத்தை பரைசாற்றும் வகையில் வான் சாகச நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் விமானப்படையின் வலிமை மற்றும் சாகசத்தை பார்க்கும் வகையில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்திய விமானப்படை, வான் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.
பொதுமக்கள் எளிமையாக கண்டு ரசிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர காவல்துறை இணைந்து செய்துள்ளது. இந்த சாகச நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இன்று காலை முதலே மெரினா கடற்கரைக்கு வந்தனர்.
இந்த நிலையில் மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியின் போது வெயில் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பலருக்கு நீர்சத்து குறைபாடு ஏற்பட்டது, சுமார் 230 மயங்கிய நிலையில் 40 ஆம்புலன்ஸ்கள் மூலம் 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். மற்றவர்களுக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டது.
The post சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு appeared first on Dinakaran.