சென்னை,
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டம் 'பாரதிய வாயு சேனா' என்ற தலைப்பில் சென்னையில் வருகிற 8-ந்தேதி தாம்பரம் விமானப்படை தளத்தில் அணிவகுப்பு மரியாதை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் நடக்கிறது. இதனை முன்னிட்டு, வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது.
இதனையொட்டி விமான சாகச நிகழ்ச்சியின் முதல் ஒத்திகை நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. இதில் எம்.ஐ.-70 ரக 2 ஹெலிகாப்டர்கள் கடற்கரையில் புழுதியை கிளப்பியப்படி பறந்தன. அதில் இருந்து விமானப்படை வீரர்கள் தலா 12 பேர் வீதம் 24 பேர் நவீன ரக துப்பாக்கிகளுடன் கயிறு மூலம் கடற்கரையில் இறங்கினர். எதிரிகளிடம் சண்டையிட்டு சிறை பிடிப்பது போன்ற காட்சிகளை ஒத்திகை செய்து காண்பித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று 2-ம் கட்ட ஒத்திகை நடைபெற்றது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரக்கோணம், கோவை சூலூர், தஞ்சாவூர், பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து புறப்பட்டு வந்த 54 விமானங்கள் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டன.
இதில், விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, வானில் குட்டிக் கரணங்கள் அடித்தும், சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி ஸ்கை டைவிங் கலையில் விமானங்களுடன் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்தும் சாகசங்களை நிகழ்த்தின.மேலும், சாரங் ஹெலிகாப்டர்களின் வான் நடனம் ஆகியவை நடைபெற்றன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட டகோட்டா மற்றும் ஹார்வர்ட் ஆகிய பழங்காலத்து விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரபேல் விமானம் உள்ளிட்டவையும் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தின.
மேலும் எம்.ஐ.-70 ஹெலிகாப்டரில் காமாண்டோ வீரர்கள் வானில் இருந்து குதித்து தீவிரவாதிகளிடம் சிக்கிய பிணைக் கைதிகளை மீட்பது போன்ற சாகச காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டினர். அதேபோல், சேட்டக் ரக ஹெலிகாப்டர்களில் வீரர்கள் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து தேசியக் கொடியை ஏந்தியடி சாகசத்தில் ஈடுபட்டனர். இந்த கண்காட்சியை ஏராளமானோர் வியந்து பார்த்தனர்.
இறுதிக்கட்ட ஒத்திகை வருகிற 4-ந்தேதி நடக்கிறது. அதனை தொடர்ந்து 6-ந்தேதி காலை 11 மணிக்கு வான் சாகச நிகழ்ச்சி நடக்கிறது.