சென்னை மெட்ரோவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல்

1 month ago 10

சென்னை,

சென்னை மெரினாவில் நேற்று விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள் வீடு திரும்புவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். பேருந்து, மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்பட்டாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் வந்ததால் நேற்று காலை முதல் மாலை வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பறக்கும் ரெயில், புறநகர் மின்சார ரெயில்களில் நெரிசலில் மக்கள் பயணம் செய்தனர். மெட்ரோ ரெயில் சேவை நேற்று மக்களுக்கு மிகுந்த கை கொடுத்தது. 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்பட்டதால் கூட்டத்தை சமாளிக்க முடிந்தது. ஆனாலும் அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., சென்ட்ரல், எழும்பூர் போன்ற மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 1.70 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்வார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ததாக சென்னை மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த செப்டம்பர் 6-ந்தேதி ஒரே நாளில் 3.73 லட்சம் பேர் பயணம் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த நிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article