![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36412904-untitled-1.webp)
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக்கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 01.02.2025 முதல் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி பயன்படுத்தப்படும். பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்கள் ஆதரவைத் தொடரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜனவரி 2025-இல் வாகனம் நிறுத்துவதற்காக ஏற்கனவே வாங்கப்பட்ட மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரைஅனுமதிக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயணஅட்டை விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதி முதற்கட்டமாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் நிறுத்தம்
மெட்ரோ ரெயிலில் பயணிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 01.04.2025 முதல் எஸ்.பி.ஐ வழங்கிய தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) முழுமையாக மாற சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் படிப்படியாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக, புதிய வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், நந்தனம், சின்னமலை, OTA - நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம் மற்றும் செனாய்நகர் ஆகிய 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டை விற்பனை / ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.
அதன்படி, மேற்கூறிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரெயில்களில் பயணிப்பதற்கு அல்லது மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு பயன்படுத்திவிட்டு, மேலும் பயன்பாட்டிற்காக தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னைஅட்டை) பெற அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.