சென்னை – மாமல்லபுரம் இடையே போக்குவரத்து நெரிசல் மாம்பாக்கம் முதல் செம்பாக்கம் வரை சாலையை அகலப்படுத்த வேண்டும்

2 hours ago 2

* சட்டசபையில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி வலியுறுத்தல்

மாமல்லபுரம்: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி (விசிக) பேசியதாவது: சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லக்கூடிய பகுதியில் மிக அதிகளவில் போக்குவரத்து இருக்கிறது. இன்றைக்கு ஜிஎஸ்டி சாலை, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகள் ஆகியவற்றிற்கு இணையாகச் செல்லக்கூடிய சாலை மேடவாக்கம், மாம்பாக்கம், செம்பாக்கம் சாலை. அதில், மேடவாக்கத்திலிருந்து மாம்பாக்கம் வரை இருவழிப் பாதையாக்கி வலுவூட்டப்பட்டிருக்கிறது. மாம்பாக்கத்திலிருந்து செம்பாக்கம் செல்லக்கூடிய அந்தச் சாலையை அகலப்படுத்தி வலுவூட்டி தருவதற்கு அரசு முன்வர வேண்டும்.

மாம்பாக்கம் பகுதியில் ஒரு மேம்பாலத்தை அமைத்தால், அமைச்சர் குறிப்பிட்டதைப்போல, போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். குறிப்பாக, அங்கே கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வந்துள்ளது. இந்த தருணத்தில் அதை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், மேடவாக்கம்-மாம்பாக்கம் சாலை என்பது 27 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு சாலையாகும்.

அதில், குறிப்பாக 8 கிலோ மீட்டர் சாலை மாநகராட்சி பகுதியில் இருக்கிறது. அந்த மாநகராட்சி பகுதியில் இருக்கிற சாலை நான்கு வழிச் சாலையாக இப்போது இருந்துகொண்டிருக்கிறது. மீதமுள்ள 19 கிலோ மீட்டர் நீளமுள்ள இருவழி சாலை வனத் துறை சம்பந்தப்பட்ட சாலை. அந்த மாவட்டத்தை சார்ந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், இதுசம்பந்தமாக ஏற்கெனவே பலமுறை என்னிடத்தில், உங்களோடு சேர்ந்து வந்தும் சொல்லியிருக்கிறார்; தனியாகவும் சொல்லியிருக்கிறார்.

அந்த அடிப்படையில்தான், வனத் துறையின் செயலாளரிடம் அணுகி, பல கோப்புகள் எல்லாம் நிலுவையில் இருந்தன. அவையெல்லாம் இப்போது கிளியர் செய்த பின்னர்தான், இந்த சாலைகளையெல்லாம் போட்டுக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில், உறுப்பினர் குறிப்பிட போக்குவரத்து செறிவின் அடிப்படையில், கள ஆய்வு செய்து, நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளிக்கும். அப்படி நான்கு வழிச்சாலையாக அமைக்கிறபோது, பாலம் அமைப்பது அவசியம் என்று ஏற்படுமானால், பாலத்தையும் உடன் சேர்த்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும்’ என்றார்.

The post சென்னை – மாமல்லபுரம் இடையே போக்குவரத்து நெரிசல் மாம்பாக்கம் முதல் செம்பாக்கம் வரை சாலையை அகலப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article