சென்னை மாநகராட்சி பள்ளியில் உணவு கழிவு மூலம் எரிவாயு உற்பத்தி

12 hours ago 4

சோழிங்கநல்லூர்: சென்னை மாநகராட்சியும், கஸ்தூரிபா நகர் குடியிருப்பு சங்கமும் இணைந்து அடையாறில் உள்ள சென்னை அரசுப் பள்ளியில் பயோகாஸ் பிளாண்ட் அமைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த முயற்சியின் மூலம், பள்ளியில் சேகரமாகும் உணவு கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகள் வீணாகாமல், பயோகாஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. பள்ளியில் தினமும் உருவாகும் உணவு கழிவுகள், காய்கறி தோல்கள் உள்ளிட்டவை இந்த பயோகாஸ் பிளாண்ட்டில் மறுசுழற்சி செய்யப்பட்டு, சுத்தமான எரிவாயுவாக மாற்றப்படுகின்றன. இந்த பயோகாஸ், பள்ளியின் சமையலறையில் மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, மதிய உணவில் வழங்கப்படும் முட்டைகளை வேகவைப்பதற்கும், மாலை சிற்றுண்டிகளை தயாரிப்பதற்கும் இந்த எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.

இந்த பயோகாஸ் பிளாண்ட் மூலம், தினமும் 75 கிலோ உணவு கழிவுகளைப் பயன்படுத்தி 2 முதல் 3 கிலோ பயோகாஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், பள்ளியில் பயன்படுத்தப்படும் வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இது, பள்ளியின் இயக்க செலவைக் குறைப்பதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிசக்தி தீர்வையும் வழங்குகிறது.இந்த முயற்சி, திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதோடு, பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவுகிறது. மறுசுழற்சி மற்றும் மீள்பயன்பாட்டின் முக்கியத்துவத்தை மாணவர்கள் இதன் மூலம் கற்றுக்கொள்கின்றனர்.

மேலும், இந்த பயோகாஸ் பிளாண்ட் மூலம் உற்பத்தியாகும் எரிவாயு, புதைபடிவ எரிசக்தியைப் பயன்படுத்துவதைக் குறைத்து, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சி, பிற பள்ளிகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கஸ்தூரிபா நகர் குடியிருப்பு சங்கத்தின் ஒத்துழைப்பு, இந்த திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுபோன்ற முயற்சிகள், சென்னையை சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநகரமாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பயோகாஸ் பிளாண்ட், உணவு கழிவுகளை மதிப்பு கூட்டப்பட்ட வளமாக மாற்றுவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இதன் மூலம், சென்னை மாநகராட்சி மற்றும் கஸ்தூரிபா நகர் குடியிருப்பு சங்கம், நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயணத்தில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

*உரமாக மாற்றம்

உணவு கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகளைப் பயன்படுத்தி பயோகாஸ் உற்பத்தி செய்வது, கழிவு மேலாண்மையையும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியையும் ஒருங்கிணைக்கும் சிறந்த முறையாகும். இதற்கு முக்கியமாக அனரோபிக் டைஜெஷன் என்ற செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் கரிம கழிவுகள் நுண்ணுயிரிகளால் ஆக்சிஜன் இல்லாத சூழலில் பிரிக்கப்பட்டு, பயோகாஸ் மற்றும் உரமாக மாற்றப்படுகின்றன.

பயோகாஸ் என்றால் என்ன?

பயோகாஸ் என்பது மீத்தேன் (50-70%), கார்பன் டை ஆக்சைடு (30-40%) மற்றும் பிற வாயுக்களின் கலவையாகும். இது சமையல், மின்சார உற்பத்தி, வாகன எரிபொருள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. உணவு மற்றும் காய்கறிக் கழிவுகளின் பயன்பாடு: உணவு மற்றும் காய்கறிக் கழிவுகள் (பழைய உணவு, காய்கறித் தோல்கள், பழங்கள், மீந்த உணவு) சேகரிக்கப்படுகின்றன. இவை கரிமப் பொருட்களாக இருப்பதால், பயோகாஸ் உற்பத்திக்கு ஏற்றவை.

திட்டத்தின் நன்மைகள்

உணவு மற்றும் காய்கறி கழிவுகள் வீணாகாமல் மறுசுழற்சி செய்யப்படுவதால், குப்பை தொல்லை குறைகிறது. புதைபடிவ எரிசக்திக்கு மாற்றாக பயோகாஸ் பயன்படுத்தப்படுவதால், பசுமை இல்ல வாயு வெளியேற்றம் குறைகிறது.

*பொருளாதார சேமிப்பு: வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் பயன்பாடு குறைவதால், பள்ளியின் சமையலறை செலவு குறைகிறது.

விழிப்புணர்வு மற்றும் கல்வி: மாணவர்களுக்கு மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது. நிலையான வளர்ச்சி குறித்து கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

*எரிசக்தி தன்னிறைவு: பள்ளியின் சமையலறைக்கு தேவையான எரிவாயு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், வெளிப்புற எரிவாயு தேவை குறைகிறது.

*முன்மாதிரி முயற்சி: இத்திட்டம் மற்ற பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு முன்மாதிரியாக அமைந்து, திடக்கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கிறது. மொத்தத்தில், இந்த பயோகாஸ் பிளாண்ட் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, பொருளாதார மற்றும் சமூக நன்மைகளையும் வழங்கி, நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

The post சென்னை மாநகராட்சி பள்ளியில் உணவு கழிவு மூலம் எரிவாயு உற்பத்தி appeared first on Dinakaran.

Read Entire Article