சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த 67 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1,360 நபர்கள் அழைத்து வரப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 131 மி.மீ. மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த 67 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1360 நபர்கள் அழைத்து வரப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளன.