டெல்லி : சென்னை, மதுரை உள்ளிட்ட 25 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகை விட ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசு முதலில் மும்பை விமான நிலையத்தை தனியார் மையம் என்ற கோர்வையில் அதானிக்கு தாரைவார்த்தது. இதனை தொடர்ந்து, 2019ல் விமான நிலைய தனியார் மயமாக்கும் திட்டத்தின் அடிப்படையில் லக்னோ, அகமதாபாத், மங்களூர், ஜெய்ப்பூர்,கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 விமான நிலையங்களை இயக்குவதற்கான ஏலங்களை அதானி குழுமம் பெற்று 50 வருட குத்தகையில் அவற்றை பராமரித்து, அதற்கான கட்டணங்களை வசூலித்து வருகிறது.
இதனிடையே சென்னை விமான நிலையத்தையும், தனியார் மயமாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டாலும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பால், அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, மதுரை, பத்தூர், நாக்பூர், பாட்னா, சூரத், ராஞ்சி, ஜோத்பூர், விஜயவாடா, வதோதரா, போபால், திருப்பதி, ஹூப்ளி, இம்பால், அகர்தலா, உதய்பூர், டேராடூன், ராஜமுந்திரி உள்ளிட்ட 25 விமான நிலையங்களை தனியாருக்கு 50 வருட குத்தகைக்கு விட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. குத்தகை காலத்தில் விமான நிலையம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளராக இந்திய விமான ஆணையம் இருக்கும். ஆனால் பணிகள் அனைத்தையும் குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருமானம் ஈட்டும். ஒன்றிய அரசின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு பேரிழப்பாகும் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
The post சென்னை, மதுரை உள்ளிட்ட 25 விமான நிலையங்களை தனியாருக்கு 50 வருட குத்தகைக்கு விட ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.