மாதவரம்: சென்னை பெருநகரின் முதல் முழுமை திட்டம் 1976ம் ஆண்டும், இரண்டாம் முழுமை திட்டம் 2008ம் ஆண்டும் தயாரிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் அதன் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் முழுமை திட்டத்தில் சென்னை பெருநகரோடு ஆவடி, மீஞ்சூர், எண்ணூர், மணலி, ஆலந்தூர், தாம்பரம் உள்ளிட்டவை இணைக்கப்பட்டு நகரத்தின் நெரிசலை குறைக்கவும், மாநில மற்றும் பெருநகர அளவில் பொருளாதாரத்தை அதிகரிக்கவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இரண்டாம் முழுமை திட்டத்தின் மூலம் எதிர்கால சந்ததியினர் வாழக்கூடிய, பொருளாதார ரீதியாக துடிப்பான, சுற்றுச்சூழலுக்கு நிலையான மற்றும் சிறந்த சொத்துகளுடன் சென்னையை முதன்மையான பெருநகரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடனே கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் குத்தம்பாக்கம் உள்ளிட்ட நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள், கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலைய திட்டங்கள், உள்வட்ட மற்றும் வெளிவட்ட சாலைகள், மஞ்சம்பாக்கத்தில் டிரக் முனையம் என பல்வேறு திட்டங்கள் உள்ளடக்கப்பட்டன.
இவ்வாறாக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணக்கிட்டு தயாரிக்கப்படும் சென்னை பெருநகரின் 3வது முழுமை திட்டத்தை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ன. சுற்றுச்சூழல், பொருளாதாரம், போக்குவரத்து, காலநிலை மாற்றம், இயற்கை பேரிடர், ஆக்கிரமிப்பு, தொழில் வளர்ச்சி என பல்வேறு அம்சங்கள் நிறைந்தவையாக சென்னை பெருநகரின் மூன்றாம் முழுமை திட்டம் சிட்னி, சிங்கப்பூர், மான்செஸ்டர் போன்ற நகரங்களுக்கு ஒத்த வகையில் தயாரிக்கப்படும் என சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் 3வது முழுமை திட்டத்தின்படி, நகர்ப்புற வளர்ச்சி மையங்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், இணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னை பெருநகர் பகுதியின் 1.189 சதுர கி.மீ பரப்பளவிற்கான 3வது முழுமை திட்டத்தை (டி.எம்.பி) தயாரிக்கும் அதே வேளையில், திட்ட குழுமம் சென்னை பெருநகர பகுதியின் தற்போதைய பரப்பளவை சுற்றியுள்ள 9 வளர்ச்சி மையங்களை அடையாளம் கண்டுள்ளது.
இருப்பினும், அடையாளம் காணப்பட்ட வளர்ச்சி மையங்கள், உத்தேச சென்னை பெருநகர் பகுதியின் எல்லைக்குள் 5,904 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன. தற்போது, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏரோட்ரோபோலிஸ் என்பது வணிக மையங்கள், சரக்கு வசதிகள், ஓட்டல்கள் மற்றும் பிறவற்றை வழங்குவதன் மூலம் ஒரு விமான நிலையத்தை மையமாகக் கொண்ட ஒரு கருத்தாகும். பரந்தூரை தவிர, எண்ணூர் துறைமுகத்திற்கு அருகில் வடசென்னையில் அமைந்துள்ள மீஞ்சூர் ஒரு தொழில்துறை மற்றும் துறைமுக மையமாக உருவாக்கப்படும். மேலும் கிடங்குகள், சரக்கு போக்குவரத்து போன்ற துறைமுகம் தொடர்பான வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல், திருமழிசை சாட்டிலைட் நகரமாகவும், பெரும்புதூர் ஒரு தொழில்துறை தொகுப்பாகவும் உருவாக்கப்படும். காஞ்சிபுரம் மற்றும் மறைமலைநகர் முறையே பாரம்பரிய மற்றும் கலாச்சார நகரமாகவும், உற்பத்தி மையமாகவும் இருக்கும். செங்கல்பட்டு நகர்ப்புற மையமாகவும், மாமல்லபுரம் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அடிப்படையிலான நகரமாகவும் இருக்கும்.
“சமச்சீரான மண்டல வளர்ச்சி மற்றும் நீடித்த நகரமயமாக்கலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சென்னை பெருநகர பகுதியை சுற்றியுள்ள 9 அடையாளம் காணப்பட்ட வளர்ச்சி மையங்களுக்கான புதிய நகர வளர்ச்சி திட்டங்களை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது” என்று சிஎம்டிஏ ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. பெருநகர பகுதியை சுற்றி நகர்ப்புற வளர்ச்சி மையங்களை நிறுவுதல், பொருளாதார வாய்ப்புகளை ஊக்குவித்தல், இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் சென்னையின் மைய நகரத்தின் மீதான அழுத்தத்தை குறைத்தல், உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்தல் ஆகியவற்றை இந்த திட்டங்கள் நோக்கமாக கொண்டுள்ளன என்றும் இந்த ஆவணம் கூறியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் மற்றும் மாமல்லபுரம் ஆகிய பகுதிகளை புதுநகர் மேம்பாட்டு பகுதிகளாக மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. 6 புதிய நகரங்களில் மொத்த 141 வருவாய் கிராமங்கள் அடங்கும். பரந்தூர், பெரும்புதூர், மறைமலைநகர் ஆகிய பகுதிகளுக்கு தனித்தனியாக அறிவிப்புகள் வெளியிடப்படும்.
திருமழிசை லூப் சாலைக்கு நிலம் குவிப்பு மொத்தம் 1,605.75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு குடியிருப்பு மற்றும் வணிக வளாகத்துடன் சாலையாக மேம்படுத்தப்படும். இப்பகுதி 7 நிலம் திரட்டும் திட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
நிலம் திரட்டும் திட்டத்தின் கீழ் திருமழிசை புதுநகருக்கு லூப் ரோடு அமைக்க சிஎம்டிஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 1,605.75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அலுவலக இடங்கள் உள்பட குடியிருப்பு மற்றும் வணிக இடங்களுடன் சாலையாக அபிவிருத்தி செய்யப்படும். ஒட்டுமொத்தமாக 1,605.75 ஏக்கரில் 7 நில தொகுப்பு திட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மீஞ்சூர், செங்குன்றம், பூந்தமல்லி, வண்டலூர் ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு சென்னை வெளிவட்டச் சாலையை வளர்ச்சிப் பாதையாக மேம்படுத்தவும் திட்ட குழுமம் முன்மொழிந்துள்ளது. மீஞ்சூரில் வளர்ச்சி தொழில்துறை செயல்பாடு மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு இயக்கத்தில் கவனம் செலுத்தும், மேலும் செங்குன்றம் பசுமை தொழில்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து நிலையான வளர்ச்சிக்கு அர்ப்பணிக்கப்படும்.
பூந்தமல்லி வணிகம், தொழில் முயற்சி மற்றும் புத்தாக்கத்திற்கான வணிக மாவட்டமாக மேம்படுத்தப்படும். வண்டலூர் ஒருங்கிணைந்த வாழ்க்கை, வேலை மற்றும் ஓய்வுக்கான இடவசதியுடன் கலவையான பயன்பாட்டு மண்டலமாக இருக்கும். “சென்னை பெருநகர பகுதியில் 62 கி.மீ நீளமுள்ள வெளிவட்டச் சாலை நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையே ஒரு முக்கியமான இணைப்பாக செயல்படுகிறது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் வழித்தடம் சீரான மற்றும் நிலையான நகர்ப்புற வளர்ச்சிகு உகந்ததாகும். இருபுறமும் 1 கி.மீ இடையகத்துடன் முழு நீளத்தையும் உள்ளடக்கிய விரிவான மேம்பாட்டுத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது’’ என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் திட்டம்
முதல் முழுமை திட்டத்தில் சென்னை பெருநகரோடு ஆவடி, மீஞ்சூர், எண்ணூர், மணலி, ஆலந்தூர், தாம்பரம் உள்ளிட்டவை இணைக்கப்பட்டு, நகரத்தின் நெரிசலை குறைக்கவும், மாநில மற்றும் பெருநகர அளவில் பொருளாதாரத்தை அதிகரிக்கவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
2ம் திட்டம்
இரண்டாம் முழுமை திட்டத்தின் மூலம் சென்னையை முதன்மையான பெருநகரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடனே கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் குத்தம்பாக்கம் உள்ளிட்ட நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள், கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலைய திட்டங்கள், உள்வட்ட மற்றும் வெளிவட்ட சாலைகள், மஞ்சம்பாக்கத்தில் டிரக் முனையம் என பல்வேறு திட்டங்கள் உள்ளடக்கப்பட்டன.
The post சென்னை பெருநகரின் 3வது முழுமை திட்டத்தில் 9 வளர்ச்சி மையங்கள் உருவாக்கம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.