சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்கபட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது. புதிதாக கொண்டு வரப்படும் திட்டத்தின் படி 25 கிமீ வரை மினி பேருந்துகளை இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை தவிர தமிழகம் முழுவதும் தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் 7 மண்டலங்களில் மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் சிற்றுந்து (small bus) சேவை இருப்பதால் இந்த பகுதிகளை தவிர, சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகள் சேவைகள் வழங்கப்படாத பகுதிகளாக கருத்தப்பட்டு அங்கே மினி பஸ் சேவை வழங்கப்பட திட்டமிடப்பட்டது.
இதுகுறித்து பல தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் மாநகர் போக்குவரத்து கழகம் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் பொதுமக்கள் இந்த திட்டத்தை வரவேற்றனர். மக்களின் கருத்துக்கு ஏற்ப சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கி அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
The post சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பஸ்கள் இயக்க அனுமதி: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.