சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 வாரங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் வழங்குவது நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோடு அச்சிட்டு அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிவடிக்கை நிர்வாகம் மேற்கொண்டது.
இதற்காக மென்பொருள் தயாரிக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.294 கோடி மதிப்பிலான பணியாணை வழங்கப்பட்டது. தொடர்ந்து டாஸ்மாக்கை கணினிமயமாக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அரக்கோணம் மற்றும் ராமநாதபுரத்தில் சில கடைகளில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சோதனை ஓட்டத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் கண்டறியப்பட்டு அவற்றை சரி செய்து தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 வாரங்களில் மதுபாட்டில்களுக்கு பில் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:ரயில்டெல் நிறுவனம் வழங்கிய மென்பொருளை முதல்கட்டமாக அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 7 கடைகளில் சோதனை முறையில் கையடக்க கருவி மூலம் பில் வழங்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அப்போது பல குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
அதை தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் கண்டறிந்து மென்பொருளில் சரி செய்தனர். இதை தொடர்ந்து அரக்கோணத்தில் 83 கடைகளிலும் மற்றும் ராமநாதபுரத்தில் 110 டாஸ்மாக் கடைகளில் கையடக்க கருவி மூலம் பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 வாரங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் இவற்றை செயல்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் தமிழகம் முழுவது அனைத்து கடைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு கொண்டு வரப்பட்டு பில் வழங்கப்படுவதுடன் பார்கோடு ஸ்கேனர் வசதியும் கடைகளில் செயல்படுத்தப்படும்.
அனைத்து மதுபான ஆலைகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பார்கோடுகளை அச்சடிக்ககும் மற்றும் ஸ்கேன் செய்யும் கருவிகளை நிறுவியுள்ளன. இந்த கருவிகளை நிறுவாமல் மதுபான ஆலைகளால் டாஸ்மாக்கிற்கு மதுபானம் வழங்க முடியாது. அனைத்து மண்டலங்களிலும் இந்த நடைமுறை செயல்பாட்டிற்கு வந்த பின் மாவட்ட மேலாளர்கள் மற்றும் மூத்த மண்டல மேலாளர்களின் அலுவலகங்களும் முழு கணினிமயமாக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post சென்னை, புறநகரில் டாஸ்மாக் கடைகளில் 2 வாரத்தில் மதுபாட்டில்களுக்கு பில்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.