மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இருந்து பாட்னா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 2 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11.40 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பாட்னாவுக்கு புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிக்க 162 பயணிகள் காத்திருந்தனர். அப்போது, சென்னை – பாட்னா இடையே செல்லும் விமானம் தாமதமாக இயக்கப்படும், என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் தாமதமாக இயக்குவதற்கான காரணம் பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நிர்வாக காரணங்களால் விமானம் தாமதமாக இயக்கப்படுவதாக ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். பின்னர், பகல் 1 மணியளவில் பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, 2 மணிநேரம் தாமதமாக சென்னையில் இருந்து பாட்னாவுக்கு புறப்பட்டு சென்றது. விமானம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, விமானத்தை இயக்க வேண்டிய விமானி, வராத காரணத்தால், விமானம் 2 மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து பாட்னா புறப்பட்டுச் சென்றதாக, கூறப்படுகிறது. அதை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் உறுதி செய்யாமல், நிர்வாக காரணம் என்று மட்டும் கூறினர்.
The post சென்னை – பாட்னா பயணிகள் விமானம் 2 மணிநேரம் தாமதம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.