சென்னை: சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மீண்டும் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே தளத்தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.
இந்தநிலையில் கடந்த 25-ம் தேதி ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதனால் சக மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக பாதிக்கப்பட்ட 45 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனையடுத்து வாயுக்கசிவு ஏற்பட்ட அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 10 நாட்களுக்கு பின் இன்று (04-11-2024) பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்திருந்தனர். மேலும் பெற்றோர்கள் பலர் பள்ளி நிர்வகாத்திடம் ரசாயன வாயு கசிவு மற்றும் பள்ளியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் 2 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
The post சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு appeared first on Dinakaran.