சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரூ26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிப்பாதையாக மாற்றம்: திட்ட அறிக்கை தயார்

1 week ago 2

சென்னை: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ரூ26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மிகவும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலை என்றால் அது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை தான். தற்போது உள்ள சூழலில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் வந்து செல்லும் 80 சதவீத வாகனங்கள் இந்த சாலையைத்தான் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், தனியார் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் வாகனங்கள் அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.

இதனால், சாதாரண நாட்களிலேயே 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்த தேசிய நெடுஞ்சாலை, வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், சுபமுகூர்த்த நாட்கள், தீபாவளி, ஆயுத பூஜை, பொங்கல், தமிழ் புத்தாண்டு, சுதந்திர தினம் உள்பட பல்வேறு பண்டிகை நாட்களில் நெரிசல் மிகுத்து காணப்படும். காரணம், விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சேலம், கோவை, மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை தற்போது, 4 வழிப்பாதையாக உள்ளதே நெரிசலுக்கு காரணம்.

இந்த தேசிய நெடுஞ்சாலை பார்ப்பதற்கு இருவழிச்சாலை போவே இருக்கும். செங்கல்பட்டை கடந்துவிட்டால் ஒரே நேரத்தில் 2 வாகங்கள் தான் சாலையில் செல்ல முடியும். மறுமுனையிலும் இதுதான் நிலைமை. இதனால் மெதுவாக செல்லும் லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. திடீரென வாகன ஓட்டிகள் பிரேக் பிடிக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வாகன மிகுதியால் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக, பெருங்களத்தூர் தொடங்கி செங்கல்பட்டு வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்கவும், பயண நேரத்தை குறைக்கவும், தற்போதுள்ள 4 வழிப்பாதையை பசுமை வழி விரைவுச் சாலை (கிரீன் பீல்டு எக்ஸ்பிரஸ் வே) எனப்படும் 8 வழி அதிவிரைவு சாலையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிப் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை வரையில் 8 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதனுடன், அவசர சேவை நிலையங்கள், ஓய்வு இடங்கள் மற்றும் பிற சாலை சேவைகளும் அங்கு வரப்போகிறது. இந்த திட்டம் நிறைவேறும்போது, தமிழ்நாட்டில் போக்குவரத்து மேம்படும், வணிகமும் மேம்படும்.

இந்த 8 வழிப்பாதை எங்கு தொடங்குகிறது என்றால், சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து தொடங்குகிறது. ரூ26 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. சாலை வளைவுகள், அதிக விபத்து ஏற்படும் பகுதிகள், கூடுதல் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்க நிலம் எடுப்பு போன்ற விவரங்களை சேகரிக்கப்படுகிறது. விரைவில் திட்ட அறிக்கையை தயாரித்து, அரசின் அனுமதியை பெற்று, பணிகளை தொடங்கப்படும். இந்த விரைவு சாலை சென்னையில் இருந்து திருச்சி வரை பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்க உள்ளதால் மிகவும் முக்கியமானதாகும். இதன் காரணமாக தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை – சேலம் அதிவிரைவு சாலை முதலில் பயன்பாட்டிற்கு வரும் என்றும், அதன்பின்னரே சென்னை- திருச்சி அதிவிரைவு சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வரும். முன்னதாக சென்னை-பெங்களூரு பசுமை அதிவிரைவு சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த சாலையும் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்போகிறது,’’ என்றனர்.

4 மணி நேரமாக குறையும்
இந்த விரைவு சாலையை மாநில வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை செயல்பாட்டுக்கு வரும்போது சென்னை – திருச்சி இடையே 310 கிலோ மீட்டர் தூரம், பயண நேரம் 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை – சேலம் அதிவிரைவு சாலைக்கு அடுத்ததாக சென்னை – திருச்சி அதிவேக சாலை திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.
இதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு தொடங்கப்பட இருக்கிறது.

The post சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரூ26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிப்பாதையாக மாற்றம்: திட்ட அறிக்கை தயார் appeared first on Dinakaran.

Read Entire Article