சென்னை, ஜன.19: தை மாதம் பொங்கல் நாட்களில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை சென்னையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையியில் உள்ள ஏகாம்பர நாதர் திடலில் தொடங்கி வைத்தார். தொடக்கவிழா நிகழ்ச்சியினை 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரிலும், இணையதளம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக 1,00,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம் அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டு திடல், தி.நகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டு திடல் ஆகிய 18 இடங்களில் நேற்று முன்தினம் (17ம் தேதி) வரை 4 நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று முன்தினம் அண்ணாநகர் கோபுர பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் நாளொன்றுக்கு ரூ.5000 வீதம் மதிப்பூதியம் அளிக்கப்பட்டது. அனைத்து கலைஞர்களுக்கும் போக்குவரத்து வசதி, உணவு வசதி இவற்றுடன் இரண்டு புதிய ஆடைகள் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. பூம்புகார் நிறுவனத்தின் வாயிலாக கைவினைப்பொருட்கள் விற்பனை கூடங்களும் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்புகளும் பார்வையாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை சங்கமம் நிகழ்ச்சியினை திரளான பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புதுறையின் வாயிலாக கலை நிகழ்ச்சிகள் நேரலையிலும், யூ-டியூப் வாயிலாக இணையத்திலும் ஒளிபரப்பப்பட்டது. 18 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் 75,000க்கும் மேற்பட்டவர்கள் நேரில் கண்டுகளித்தனர். முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், யூ-டியூப் வாயிலாக லட்சக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சிகளை கண்டு களித்துள்ளனர். சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 8 நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
The post ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சியை பல லட்சம் பேர் கண்டு ரசித்தனர்: கோவை, திருச்சி, மதுரை என 8 நகரங்களில் விரைவில் நடத்த திட்டம் appeared first on Dinakaran.