சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கண்டெய்னர் தாங்கி செல்லும் காலி சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. இதனால், ஆவடி இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் அவதிப்பட்டனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்துக்கு கண்டெய்னர் தாங்கி செல்லும் சரக்கு ரயில் ஒன்று வந்தது. அங்கு சரக்குகள் அடங்கிய கண்டெய்னர்களை இறக்கிவிட்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தண்டையார்பேட்டை சரக்கு முனையத்தை நோக்கி கண்டெய்னர்கள் இல்லாத திறந்த காலி சரக்கு ரயில் மாலை 4.45 மணி அளவில் புறப்பட்டது. இந்த காலி சரக்கு ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில், இந்த ரயிலின் இரண்டு பெட்டிகளில் உள்ள 8 சக்கரங்கள் தடம்புரண்டு, தரையில் இறங்கின. இதன் சத்தத்தைகேட்டு, ரயிலை ஓட்டுநர் நிறுத்தினார்.