சென்னை,
அலகாபாத் ஐகோர்ட்டில் இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதி ஷமிம் அகமது என்பவரை மாற்ற, சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், இவரை ஐகோர்ட்டு நீதிபதியாக இடமாற்றம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிபதி ஷமீம் அகமது நேற்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இருந்தும், 8 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன
புதிய நீதிபதியை வரவேற்று பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் பாஸ்கர், பெண் வக்கீல் சங்கத் தலைவி ரேவதி உள்ளிட்டோர் பேசினர்.
1966-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பிறந்த நீதிபதி ஷமிம் அகமது, அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், சட்டப்படிப்பும் முடித்து, 1993-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி வக்கீலாக, உத்தரபிரேதசம் மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்தார். அலகாபாத் ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக 2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி பதவி ஏற்றார். வருகிற 2028-ம் ஆண்டு மார்ச் 7-ந்தேதி ஓய்வு பெற உள்ளார்.