சென்னை உள்பட 10 மாவட்டங்களில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்: 70 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்கட்டமாக விநியோகம்

5 hours ago 2

அரக்கோணம்: தமிழகத்தில் சென்னை, ராணிப்பேட்டை உள்பட 10 மாவட்டங்களில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. முதற்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் சுமார் 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்படுகிறது.

அதன்படி ரேஷன் கடைகளுக்கு கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று பயோமெட்ரிக்கில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதில் மூத்த குடிமக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மட்டும் தங்களின் சார்பில் வேறு ஒருவரை வைத்து ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை கொண்டு செல்லும் திட்டம் ஆந்திராவில் செயல்பாட்டில் இருந்தது. அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. இதையடுத்து அந்த திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த திட்டத்தை தமிழக அரசு தொடங்கி செயல்படுத்த முயற்சித்து வருகிறது.

அதன்படி முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சென்னை, கடலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவு, உணவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

மேலும் இந்த திட்டம் ஜூலை 1ம்தேதி (இன்று) முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னை, ராணிப்பேட்டை உள்பட 10 மாவட்டங்களில் தலா 2 தாலுகாக்களில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகாவில் ஆற்காடு இளங்குப்பன் தெரு கூட்டுறவு பண்டகசாலை கடை எண்-2, புதுத்தெரு கற்பகம் ரேஷன் கடை எண்-1, மேட்டுத்தெரு கூட்டுறவு விற்பனை சங்கம் கடை எண்-1 மற்றும் 5, பூபதி நகர் கடை எண்-5, முப்பதுவெட்டி கிராமம் கடை எண்-1 மற்றும் 2, பூங்கோடு கடை எண்-1, சாத்தூர் கடை எண்-1 மற்றும் 2, ஆகிய 10 இடங்களிலும், கலவை தாலுகாவில் நல்லூர் கிராமத்தில் 2 கடைகளும், சிட்டந்தாங்கல், தோணிமேடு, பொன்னமங்கலம், ஆரூர், மேல்புதுப்பாக்கம், ஆயர்பாடி, மருதம், இருங்கூர் ஆகிய 10 கிராமங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த சோதனை முயற்சியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதன்படி வரும் சுதந்திர தினம் அல்லது செப்டம்பர் மாதத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்கள் நேரடியாக வினியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி மாதந்தோறும் முதல் வாரத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் சென்று விடும். இதனால் அவர்கள் ரேஷன் கடைக்கு அலைய வேண்டிய தேவை இருக்காது.

The post சென்னை உள்பட 10 மாவட்டங்களில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்: 70 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்கட்டமாக விநியோகம் appeared first on Dinakaran.

Read Entire Article