சென்னை உணவுத் திருவிழாவில் ரூ.1.55 கோடி வருவாய்: உதயநிதி ஸ்டாலின்

14 hours ago 2

சென்னை,

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், நகர்ப்புறத்தில் செயல்படும் 180 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2,136 மகளிருக்கு 15.71 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளையும், சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற உணவுத் திருவிழாவின் வெற்றிக்கு செயலாற்றிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என 138 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் உணவுத் திருவிழா குறித்த "Flavours of Fortune" என்ற புத்தகத்தை வெளியிட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் உருவாக்கப்பட்ட குறும்படத்தையும் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

அதன்பின்னர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்பேரில், வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக, சென்னையில் கடந்த மாதம் டிசம்பர் 20-ம் தேதியில் இருந்து 24 வரை ஐந்து நாட்கள் நடத்தப்பட்ட உணவுத் திருவிழாவில் சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த அருமை சகோதரிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி கவுரவிப்பதில் நாங்கள் அனைவரும் பெருமை அடைகின்றோம், மகிழ்ச்சி அடைகின்றோம்.

அதே போல, இங்கே வருகை தந்திருக்கக் கூடிய மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2 ஆயிரம் மகளிருக்கு ரூபாய் 15 கோடி அளவில் வங்கி கடன் இணைப்பையும் வழங்க இருக்கின்றோம். சென்னையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில், கிட்டத்தட்ட 300 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் பங்கேற்று, உணவுப்பொருட்களை தயார் செய்து விற்பனை மேற்கொண்டீர்கள்.

சமையல் என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. ஒரு குடும்பத்தில் இருப்பவர்களை திருப்திப்படுத்த சமைப்பதே மிகப் பெரிய விஷயம். ஆனால், இங்கே வந்திருக்கிற மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த சகோதரிகள் நீங்கள், சென்னை உணவுத் திருவிழாவில் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேருக்கு, அதாவது கிட்டத்தட்ட ஒரு 1 லட்சம் குடும்பத்தினருக்கு சமைத்திருக்கின்றீர்கள்

உணவுத்திருவிழா நடைபெற்ற அந்த 5 நாட்களிலுமே அவ்வளவு கூட்டம் நின்றிருந்தது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் உணவினை வாங்கி சென்று ருசித்ததை நாங்கள் அனைவரும் கண்கூடாக பார்த்தோம். மெரினாவில் வருகிற கடல் அலையைவிட உணவுத்திருவிழாவுக்கு வருகிற மக்கள் தலையே அதிகமாக இருந்தது என்பதை சென்னை மக்கள் அனைவரும் பார்த்தார்கள்.

நாங்களும் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டோம். அவர்கள் அன்போடு கொடுத்தார்கள், ஒவ்வொன்றையும் ருசித்தோம். அவ்வளவு சுவையாக இருந்தது. இதனை நான் வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை. 5 தினங்கள் மட்டுமே நடத்தப்பட்ட இந்த உணவுத் திருவிழாவுக்கு சுமார் மூன்றரை லட்சம் பேர் வருகை தந்து மொத்தம் ரூபாய் 1 கோடியே 55 லட்சம் அளவுக்கு உணவுப் பொருட்களை வாங்கி சுவைத்துள்ளனர். இதன்மூலம் ரூ.1.55 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேலும், நமது உணவுத் திருவிழாவில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஊட்டி ரோஸ் மகளிர் சுய உதவிக் குழுவினர், 5 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மட்டன் பிரியாணி உணவுகளை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறார்கள். மகளிரை தொழில் முனைவோர் ஆக்கி அழகு பார்க்க வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்படுகிற நம்முடைய முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்த உணவுத்திருவிழாவின் மூலம், பல்லாயிரக்கணக்கான மகளிர் தொழில் முனைவோரை உருவாக்கி உள்ளது. அதற்காக தான் இன்றைக்கு இந்தியாவே திரும்பி பார்க்கிற வகையில், ஏராளமான திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகின்றது.

மகளிரின் முன்னேற்றத்துக்கு நம்முடைய அரசு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கு இந்தத் திட்டங்களே சாட்சி. இங்கே கூட, நம்முடைய 180 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு ரூபாய் 15 கோடி அளவுக்கு வங்கி கடன் இணைப்புகளை வழங்குகிறோம்.

உணவுத்திருவிழாவில் ஒரு சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல், மிகுந்த கட்டுக்கோப்புடன் இந்த உணவுத்திருவிழா நடத்தப்பட்டு இருக்கிறது. இதனை சிறப்பாக ஒருங்கிணைத்த நம்முடைய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலர்கள் மற்றும் பங்கேற்ற சுய உதவிக் குழுவினருக்கு அத்தனைப் பேருக்கும் எங்களுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல, மெரினாவில் நாள் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும், மூன்றரை லட்சம் பேர் வந்து போனாலும், அந்த இடத்தை மிகத் தூய்மையாக பராமரித்த சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், இந்த உணவுத் திருவிழா இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்றால், இதற்கு மிகவும் முக்கிய காரணம் சென்னை மக்களுக்கும் இந்த நேரத்தில் எங்களுடைய நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்தடுத்த ஆண்டுகளிலும், உணவுத் திருவிழாவை இன்னும் பெரிதாக, அதிக கடைகளோடு, இன்னும் பிரம்மாண்டமாக நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் இங்கு மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன். சுய உதவிக்குழுவைச் சேர்ந்த உங்கள் அனைவரின் வெற்றிப்பயணம் ஒவ்வொரு ஆண்டும் தொடரட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article