சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 16 புதிய காவல் நிலையங்கள் 280 இன்ஸ்பெக்டர் பணியிடம் உருவாக்கி காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்: பேரவையில் 102 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

5 hours ago 1

சென்னை: சென்னை, கோவை, கீழடி உட்பட தமிழகம் முழுவதும் 16 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும், 280 இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் உருவாக்கி எஸ்ஐ தலைமையிலான காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் சட்டப்பேரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திருவண்ணாமலையில் கோயிலுக்கு என ரூ.2.83 கோடி செலவில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும்.

மதுரை மாநகர காவல் ஆணையரகத்தில் மாடக்குளத்தில் ரூ.6.57 கோடி செலவில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும். சென்னை பெருநகர காவல்துறையில் திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் ரூ.7.50 லட்சம் செலவில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். சென்னை பெருநகர பெரம்பூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ.7.50 லட்சம் செலவில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ரூ.72.30 லட்சம் செலவில் புதிதாக காவல் உட்கோட்டம் உருவாக்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ரூ.72.30 லட்சம் செலவில் புதிய காவல் உட்கோட்டம் உருவாக்கப்படும். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ரூ.72.30 லட்சம் செலவில் புதிய காவல் உட்கோட்டம் உருவாக்கப்படும். சென்னை பெருநகர காவல் எல்லையில் அரும்பாக்கம் சரகத்தில் ரூ.2.68 கோடியில் புதியதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படும். சென்னை பெருநகர காவவில் நுண்ணறிவு பிரிவில் புதிதாக திட்டமிட்டக் குற்றப்பிரிவு ரூ.13 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

சென்னை பெருநகர காவலில் நுண்ணறிவு பிரிவில் ரூ.8 லட்சம் செலவில் புதிதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உருவாக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு என ரூ.1.05 கோடி செலவில் புதிய அலகு உருவாக்கப்படும். மயிலாடுதுறை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் 2 தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அலகுகள் ரூ.4.04 கோடி செலவில் உருவாக்கப்படும்.

இருப்புப்பாதை காவல் நிலையங்களின் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக சென்னையில் உள்ள தலைமையிடத்தில் புதிய தொலை தொடர்பு சாதனங்களை கொண்ட ஒருங்கிணைந்த தலைமை கட்டுப்பாட்டு அறை, வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க செய்யும் பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவு ரூ.1.14 கோடி செலவில் அமைக்கப்படும். குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை பெருநகர பகுதிகளில் ஒருங்கிணைத்தல் மற்றும் நிர்வாக பணிகளுக்காக 2 புதிய கண்காணிப்பாளர் பணியிடங்கள் ரூ.63 லட்சத்தில் உருவாக்கப்படும். 280 இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, எஸ்ஐ தலைமையிலான காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக ரூ.1.18 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆவடி போக்குவரத்து காவல் பிரிவை பிரித்து செங்குன்றம் பிரிவு
ஆவடி போக்குவரத்து காவல் பிரிவினை இரண்டாக பிரித்து செங்குன்றம் மாவட்ட போக்குவரத்து காவல் பிரிவு ரூ.59 லட்சம் செலவில் உருவாக்கப்படும். சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் புதிய பணியிடங்கள் 2 கட்டங்களாக ரூ.21.02 கோடி செலவில் உருவாக்கப்படும். சிலை தடுப்பு பிரிவு, இணையவழி குற்றப்பிரிவு, ரயில்வே காவல் (சென்னை, திருச்சி ரயில்வே மாவட்டங்கள்) ஆகியவற்றிற்காக தலா ஒன்று வீதம் 4 சட்ட ஆலோசகர் பதவிகள் ரூ.24 லட்சத்தில் உருவாக்கப்படும்.

The post சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 16 புதிய காவல் நிலையங்கள் 280 இன்ஸ்பெக்டர் பணியிடம் உருவாக்கி காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்: பேரவையில் 102 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் appeared first on Dinakaran.

Read Entire Article