முட்டுக்காடு: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மழை தீவிரமாக பெய்யும் இதன் ஒரு பகுதியாக சென்னை ஒட்டிய கடற்கரை பகுதியான முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.
ஓ.எம்.ஆர். சாலை மற்றும் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள கொண்டங்கி, சிறுதாவூர், தையூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் இருந்து வரும் உபரி நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக முட்டுக்காக முகத்துவாரம் சென்று அங்கு கடலில் கலக்கிறது. அதிக நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றின் காரணமாக அந்த முகத்துவாரப் பகுதியில் மண் சேர்ந்து விடுவது வழக்கம். ஒவ்வொரு 3 மாத இடைவெளியிலும் இந்த முகத்துவாரப் பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஆகியவை இணைந்து தூர் வாரும் பணியை மேற்கொள்கின்றன. இந்நிலையில் இப்பணியை இன்று (அக்13) மாலை பார்வையிட்ட துணை முதல்வர் மழைக்காலங்களில் வெள்ள நீர் முகத்துவாரப் பகுதியை வந்து சேரும் இடம், கடலில் கலக்கும் இடம், தூர் வாரப்படும் மண்ணை கொட்டி வைக்கும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மழை நீர் கடலில் சென்று சேரும் இடத்தில் இருந்து அகற்றப்படும் மண்ணை அதே பகுதியில் கொட்டி வைக்காமல் உடனடியாக அகற்றி விடுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.