சென்னை அருகில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் சர்வதேச தைவானிய தொழில் பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு!!

5 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டில் ஈர்க்கப்படும் அந்நிய நேரடி முதலீட்டில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட தைவான் நாட்டு நிறுவனங்களுக்கு, உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கென சென்னைக்கு அருகில் ரூ.10,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் ஈர்க்கப்படும் அந்நிய நேரடி முதலீட்டில், குறிப்பாக மின்னணு மற்றும் காலணி போன்ற துறைகளில், தைவானிய முதலீடுகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. மாநிலத்தில் உள்ள முக்கிய தைவான் நாட்டு நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கு பிரத்தியேகமான உற்பத்தி இடம் தேவை என்பதை உணர்ந்து, சென்னைக்கு அருகில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும். மின்னணு உதிரி பாகங்கள், தொழில்நுட்ப ஜவுளி மற்றும் காலணி உதிரி பாகங்கள் போன்ற தொழில்களில் தைவானிய நிறுவனங்களிடமிருந்து ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதை இந்த பூங்கா இலக்காகக் கொண்டிருக்கும். இதனால் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களுக்கு நேரடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு சேவைகள் வழங்குவதற்கு, இந்நாடுகளில் வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வுகள் (Guidance Desks) அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள, முதலீட்டிற்கு சாதகமான சூழலை, அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வுகள் (Guidance Desks) மேற்கண்ட நாடுகளில் அமைக்கப்படும். இதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு நேரடி ஆதரவுச் சேவைகள் வழங்கப்படுவது மட்டுமின்றி, புதிய முதலீட்டு வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு, உலக பொருளாதார நிலையில், தமிழ்நாட்டின் நிலை மேலும் வலுப்படும்.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் விதமாக மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மாநிலமெங்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஏற்கனவே அறிவித்துள்ளவாறு, திருநெல்வேலி, ஈரோடு, கன்னியாகுமரி போன்ற இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவப்படுவதோடு, தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நாகப்பட்டினம் மாவட்டத்தில், தகவல்-தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாய் இம்மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக செயலாக்க நிறுவனங்கள் )BPOs), புத்தொழில் நிறுவனங்கள் )Startups) போன்றவைகள் எளிதாக அமைப்பதற்கு டைடல் நியோ-மினி டைடல் பூங்கா அமைக்கப்படும். இதனால் நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலுள்ள சுமார் 600 படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தும். தமிழ்நாட்டின் தொழில் துறையின் சர்வதேச தரத்திலான உற்பத்தி திறனையும், வரலாற்று சிறப்புகளையும், வளர்ச்சி மற்றும் சாதனைகளையும் காட்சிப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.

உலக அளவில், உற்பத்தியில் மேம்பட்ட நாடாக இந்தியாவை உயர்த்திடுவதில், தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில் துறையில் நீண்டகால பாரம்பரியமும் பெருமையும் கொண்டுள்ள தமிழ்நாடு, வடிவமைப்பு, தயாரிப்பு மேம்பாடு, நவீன தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திலும் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. தொழில் துறையின் சர்வதேச தரத்திலான உற்பத்தி திறனையும், வரலாற்று சிறப்புகளையும், எழுச்சிமிகு வளர்ச்சியையும், சாதனைகளையும் உலகத்திற்கு எடுத்துக்காட்டும் வகையில், குறிப்பாக படிக்கும் மாணவர்களும், இளைஞர்களும் இப்பெருமிதங்களை அறிந்து கொள்ளும் விதமாக ஊடாடும் (interactive) வசதிகளுடன் கூடிய தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.650 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 9000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சின்னசேலம் வட்டத்தில், சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சின்னசேலம் வட்டத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம் அமைத்திடும். சாலைகள், தெரு விளக்குகள், மழைநீர் வடிகால், தொழிற்சாலைகளுக்கு தேவையான நீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை போன்ற அத்தியாவசியமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள இப்பூங்காவின் மூலம் சுமார் ரூ.650 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் சுமார் 9,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தென்காசி மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 3000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சங்கரன்கோவில் வட்டத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், மாவட்டத்திற்கு ஒரு தொழிற்பூங்கா அமைக்க இந்த அரசு முனைந்து வருகிறது. அதன் அடிப்படையில், தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில் வட்டத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழிற்பூங்காவினை சிப்காட் நிறுவனம் அமைத்திடும். சாலைகள், மழைநீர் வடிகால், தொழிற்சாலைகளுக்கு தேவையான நீர் வழங்கல், தெரு விளக்குகள், பசுமை சூழல் பேணுதல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் போன்ற அனைத்து அத்தியாவசியமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள இப்பூங்காவின் மூலம் சுமார் ரூ.300 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன், சுமார் 3,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், ரூ.200 கோடி முதலீட்டினை ஈர்ப்பதுடன், 2000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், காரைக்குடி வட்டத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், காரைக்குடி வட்டத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம் அமைத்திடும். சாலைகள், தெரு விளக்குகள், மழைநீர் வடிகால், தொழிற்சாலைகளுக்கு தேவையான நீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை போன்ற அத்தியாவசியமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள இப்பூங்காவின் மூலம் சுமார் ரூ.200 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் சுமார் 2,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

வேலூர் மாவட்டத்தில், ரூ.500 கோடி முதலீட்டினை ஈர்ப்பதுடன், 5000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், காட்பாடி வட்டத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், காட்பாடி வட்டத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம் அமைத்திடும். சாலைகள், தெரு விளக்குகள், மழைநீர் வடிகால், தொழிற்சாலைகளுக்கு தேவையான நீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை போன்ற அத்தியாவசியமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள இப்பூங்காவின் மூலம் சுமார் ரூ.500 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் சுமார் 5,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.250 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 2500 புதிய வேலைவாய்ப்புகளை குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக நாட்றம்பள்ளி வட்டத்தில் சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலணி உற்பத்திப் பூங்கா உருவாக்கப்படும்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டத்தில் சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் ஒரு தோல் அல்லாத காலணி உற்பத்திப் பூங்கா உருவாக்கப்படும். சாலைகள், தெரு விளக்குகள், மழைநீர் வடிகால், தொழிற்சாலைகளுக்கு தேவையான நீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை போன்ற அத்தியாவசியமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள இப்பூங்காவின் மூலம் சுமார் ரூ.250 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் சுமார் 2,500 நபர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை ஜவுளி மற்றும் ஆடை தயாரிக்கும் தொழில் மையங்களாக உருவாக்கும் விதமாக ஜவுளி தொழில் கூட்டமைப்புகளுடன் இணைந்து இம்மாவட்டங்களில் சிப்காட் டெக்ஸ் பார்க்ஸ் (SIPCOT Tex Parks) எனும் ஆயத்த தொழிற்கூட வசதிகள் (Plug & Play facilities) ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு, ஜவுளி மற்றும் ஆடை தயாரிக்கும் தொழிலில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை ஜவுளி மற்றும் ஆடை தயாரிக்கும் தொழில் மையங்களாக உருவாக்கும் வகையில் சிப்காட் நிறுவனம், ஜவுளி தொழிற்கூட்டமைப்புகளுடன் இணைந்து, இம்மாவட்டங்களில் ஆயத்த தொழிற்கூட வசதிகளை (Plug & Play facilities) அமைக்கும். இதன்மூலம், ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

திருவள்ளூர் மாவட்டம் – கும்மிடிப்பூண்டி, மாநல்லுார் மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 22.70 மில்லியன் லிட்டர் மூன்றாம் நிலை மறுசுழற்சி நீர் (TTRO water) விநியோகிப்பதற்கான அமைப்பு ரூ.380 கோடியில் ஏற்படுத்தப்படும்.

கும்மிடிப்பூண்டி, மாநல்லுார் மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக, பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கொடுங்கையூர் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 22.70 மில்லியன் லிட்டர் மூன்றாம் நிலை மறுசுழற்சி நீர் (TTRO) விநியோகிப்பதற்கான அமைப்பு சுமார் ரூ.380 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். இத்திட்டம், சிப்காட்டின் சுயநிதி மற்றும் நிதி நிறுவனங்களின் நீண்ட கால கடன் மூலம் செயல்படுத்தப்படும்.

இதனால், இத்தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு நிலத்தடி மற்றும் ஏரிநீர் பயன்பாடு/உபயோகம் தவிர்க்கப்படுவதால், இம்மாவட்டத்தில் நன்னீர் இருப்பு அதிகரித்து, நிலையான நீர் மேலாண்மைக்கு துணை புரியும்.

தொழிலாளர்களின் நலனை பேணும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிள்ளைப்பாக்கம், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் தொழிற்பூங்காக்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் தங்குமிட தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் 2,000 படுக்கைகள் கொண்ட தொழிலாளர் தங்குமிட வசதிகள் உருவாக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் தங்குமிட தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சிப்காட் நிறுவனத்தின் சிறப்பு நோக்க முகமையான Tamil Nadu Industrial Housing Private Limited (TNIHPL) மூலம் சுமார் ரூ.120 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் ஆகிய தொழிற்பூங்காக்களில் முறையே 600, 650 மற்றும் 750 படுக்கைகள் கொண்ட தொழிலாளர் தங்குமிட வசதிகள் அமைக்கப்படும். இதன் மூலம், தொழிலாளர்களின் பயண நேரம் சேமிக்கப்படுவதுடன், அவர்களது ஆரோக்கியமும், தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனும் மேம்படும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மூலம் கடன் பெறும் சுமார் 1300 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில், காலக்கடன்களுக்கு பெறப்பட்டு வரும் ரூ.5000 முதல் ரூ.10 இலட்சம் வரையிலான ஆய்வுக்கட்டணம் இந்நிதியாண்டில் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற காலக் கடன்களுக்கு, ஆய்வுக் கட்டணம் வசூலித்து வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, அந்நிறுவனங்களுக்கு வழங்கி வரும் காலக் கடன்களுக்கு கடன் தொகையை பொறுத்து ரூ.5,000/- முதல் ரூ.10 இலட்சம் வரை பெறப்பட்டு வரும் ஆய்வுக் கட்டணம், இந்நிதியாண்டில் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். இதனால், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெறும் சுமார் 1300 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நவீன சேமிப்பு வசதிகளின் அவசியத்தைக் கருதி, புதிய சேமிப்பு கிடங்குகள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் ”தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொள்கை” (Tamil Nadu Warehousing Policy) வெளியிடப்படும்.

அதிக தொழில் நிறுவனங்களை கொண்டு, ஏற்றுமதி பங்களிப்பில் பல்வேறு துறைகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. சரக்கு கையாளுதல் உள்ளிட்ட ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்து விநியோகச் சங்கிலி பிணைப்பையும் தமிழ்நாடு வலுவாகப் பெற்றுள்ளது. சரக்கு போக்குவரத்து துறையில் தமிழ்நாட்டை மேலும் மேம்படுத்துவதற்காக, நவீன உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ‘ஏ’ வகை சேமிப்பு கிடங்குகள் உட்பட தனியார் நிறுவனங்கள் மூலம் மாநிலம் முழுவதும் உகந்த இடங்களில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படுவதை ஊக்குவிக்கும் விதமாக “தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொள்கை” வெளியிடப்படும். கடல்சார் உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் துறையில் முதலீடுகளை ஊக்குவித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ”கடல்சார் உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் கொள்கை 2025” வெளியிடப்படும்.

தமிழ்நாடு, மிக நீண்ட கடற்கரைப் பகுதி கொண்டிருப்பதால், இங்கு கடல்சார் உணவுப்பொருட்கள் உற்பத்தியும், ஏற்றுமதியும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. எனவே, கடல்சார் உணவுப்பொருட்கள் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், “கடல்சார் உணவுப்பொருட்கள் பதப்படுத்தும் கொள்கை 2025” வெளியிடப்படும். இதனால், மூலப்பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதி திறன் அதிகரித்தல், குளிர்ப்பதன உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவை உறுதி செய்யப்பட்டு, இத்துறையில் மாநிலத்தின் நிலை மேலும் வலுப்படும்.

தஞ்சை மாவட்டத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ராஜாமடத்தில் சுமார் 100 ஏக்கரில் கடல்சார் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி பூங்கா அமைக்கப்படும். இதனால், ரூ.200 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 2,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

கடல்சார் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ராஜாமடத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், மீன் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிப் பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம் அமைக்கும். தர பரிசோதனை ஆய்வகங்கள், குளிர்சாதன வசதிகளுடன் கூடிய சேமிப்பு கிடங்குகள் போன்ற வசதிகளுடனும் மீன்கள் மற்றும் இதர கடல்சார் உணவுகளை பதப்படுத்தி, ஏற்றுமதி செய்வதற்கு தேவையான சிறப்பு கட்டமைப்பு வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இப்பூங்காவின் மூலம் சுமார் ரூ.200 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 2,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தங்கள் இடத்தில் இருந்தபடியே தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து சுலபமாக முடிவுகள் எடுக்க வழிவகுத்திடும் வகையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் குறிப்பிட்ட தொழிற்பூங்காக்கள் மற்றும் ஆயத்த தொழிற்கூடங்கள் ஆகியவற்றின் மெய்நிகர் பிரதிகள் (virtual walk-through) வழிகாட்டி நிறுவனத்தால் உருவாக்கப்படும்.

உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள், தங்கள் இடங்களில் இருந்தபடியே தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில் பூங்காக்கள் மற்றும் ஆயத்த தொழிற்கூடங்களை மெய்நிகரில் பார்வையிடும் வகையில், முப்பரிமாண (3D) காட்சிகள், மிகை மெய்மை (Augmented Reality) மற்றும் தோற்ற மெய்மை (Virtual Reality) தொழில்நுட்பங்கள், உருவகப்படுத்துதல் (Simulation) மற்றும் முக்கிய தகவல்களுடன் குறிப்பிட்ட தொழிற்பூங்காக்கள் மற்றும் ஆயத்த தொழிற்கூட வசதிகள் ஆகியவற்றின் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உயர் துல்லியமான மெய்நிகர் பிரதிகள் (virtual walk-through) வழிகாட்டி நிறுவனத்தால் உருவாக்கப்படும். இதனால் முதலீட்டாளர்களுக்கு விரிவான டிஜிட்டல் அனுபவம் கிடைப்பதுடன், அவர்களின் நேரத்தை வெகுவாக சேமிக்கவும், முதலீடு செய்வது குறித்து சுலபமாக முடிவுகள் எடுக்கவும் முடியும்.

வழிகாட்டி நிறுவனம் வழங்கி வரும் முதலீட்டு சேவைகளின் புதிய பரிணாமமாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முதலீடு தொடர்பான தகவல்களை பல்வேறு மொழிகளில் அளிக்கக்கூடிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படும்

முதலீட்டாளர்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் சேவைகளை வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு முகவாண்மையான வழிகாட்டி நிறுவனத்தில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இணையதளம் அறிமுகப்படுத்தப்படும். முதலீடு மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் கொண்ட நிகழ்நேர பொருளாதாரத் தகவல் பலகை (Realtime Economic Dash Board), Chatbot உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கொண்ட இதன்மூலம், முதலீட்டாளர்கள் தங்களது துறை சார்ந்த சூழலமைப்பு, விநியோகச் சங்கிலி, துணை உற்பத்தியாளர்கள், கொள்கைகள், மானியங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவிறக்கம் செய்ய இயலும். இத்தகவல்களை முழுமையாகவும், துல்லியமாகவும், பல்வேறு மொழிகளிலும் அளித்திடும் வகையில் இவ்விணையதளம் வடிவமைக்கப்படும்.

சிப்காட் தொழிற்பூங்காக்களின் தோற்றப்பொலிவை உலக தரத்திற்கு ஈடாக மேம்படுத்த ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மென்மேலும் முன்னெடுத்து செல்லும் விதமாக, அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களின் தோற்றப் பொலிவு உலக தரத்திற்கு இணையாக மாற்றியமைக்கப்படும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திறமை மிக்க கட்டிடக்கலை நிபுணர் மற்றும் இயற்கை வனப்பு (landscaping) நிபுணர் அடங்கிய ஒரு சிறப்புப் பிரிவு (Special Cell) உருவாக்கப்படும். இந்தப் பிரிவு அனைத்து சிப்காட் தொழிற் பூங்காக்களின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து, அவற்றின் தன்மைக்கேற்ப தொழில் முனைவோர்களை ஈர்க்கும் வகையில் தோற்றப்பொலிவை மேம்படுத்தும்.

தருமபுரி மாவட்டத்திலும், திருவள்ளூர் மாவட்டம் – மாநல்லூரிலும் அமையப் பெற்றிருக்கும் சிப்காட் தொழிற்பூங்காக்களில் தொழிற்சாலைகள் அமைக்கும் பணியை திறம்பட செயல்படுத்துவதற்காக ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் சிப்காட் நிர்வாக அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.

மண்டல அளவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், தருமபுரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்காக, தருமபுரி மற்றும் மாநல்லூர் தொழிற்பூங்காக்களில் மொத்தம் ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் சிப்காட் நிர்வாக அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.

The post சென்னை அருகில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் சர்வதேச தைவானிய தொழில் பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article