செங்கை அரசு மருத்துவமனையில் ரூ.1.32 கோடியில் தாய்-சேய் நலப்பிரிவு கட்டிடம்: அமைச்சர்கள் துவக்கிவைத்தனர்

3 months ago 17

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாலை ரூ.1.32 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தாய்-சேய் நலப்பிரிவு கட்டிடம் மற்றும் பார்வையாளர்கள் தங்கும் வளாகத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் துவக்கி வைத்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, புதிதாக ரூ.1.32 கோடி மதிப்பில் தாய்-சேய் நலப் பிரிவு கட்டிடம் மற்றும் பார்வையாளர்கள் தங்கும் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 வளாகங்களையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த 2 வளாகங்களையும் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் துவக்கிவைத்து பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மூலம் கிட்டத்தட்ட 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. இங்கு 12க்கும் மேற்பட்ட சிறப்பு மற்றும் அதிசிறப்பு மருத்துவ துறைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் நாளொன்றுக்கு சுமார் 3500 வரையிலான புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 600க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர்.

இங்குள்ள மையத்தில் பிரசவ வார்டு, ஆபரேஷன் தியேட்டர் ரத்த வங்கி, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு உள்பட பல்வேறு முழுமையான வசதிகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 50 பிரசவங்கள் நடக்கின்றன. இங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை உடனிருந்து கவனிப்பவர்களுக்காக, புதிதாக தனியே பார்வையாளர்கள் தங்கும் வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இதுபோன்று பல்வேறு இடங்களில் மக்களுக்காக மருத்துவத் துறை சார்பில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 20 லட்சத்து 44 ஆயிரத்து 347 நபர்கள் தொடர் சேவையில் பயனடைந்துள்ளனர். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் 72 முகாம்கள் நடத்தப்பட்டு 72,365 நபர்கள் பயனடைந்துள்ளனர். சிறுநீரக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 804 பேருக்கும், இதயம் காப்போம் திட்டத்தின்கீழ் 205 நபர்களுக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்காக கலைஞர் மற்றும் தமிழக முதல்வரால் கொண்டு வரப்பட்ட எண்ணற்ற திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். இதைத் தொடர்டந்து 2 அமைச்சர்களும் அவ்வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இதில் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, சார் ஆட்சியர் நாராயண சர்மா, மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவசங்கர், துணை முதல்வர் அனிதா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், நகரமன்றத் தலைவர்கள் மறைமலைநகர் ஜெ.சண்முகம், செங்கல்பட்டு தேன்மொழி நரேந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோதிகுமார், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணன், முதுநிலை ஆலோசகர் முத்துசாமி, ரெனால்ட் நிசான் ஆட்டோமேட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் கீர்த்தி பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செங்கை அரசு மருத்துவமனையில் ரூ.1.32 கோடியில் தாய்-சேய் நலப்பிரிவு கட்டிடம்: அமைச்சர்கள் துவக்கிவைத்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article