செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி கலெக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லம் ஊராட்சி நேரு நகர் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் பங்கேற்று கலெக்டர் அருண்ராஜ் துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள 841 நியாய விலைக் கடைகளில், 4 லட்சத்து 44,559 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு 4 லட்சத்து 36,061 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். பொங்கல் பரிசு தொகுப்பானது, 9ம் தேதி துவங்கி முதல் 12ம் தேதி வரை டோக்கன் அடிப்படையில் வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு 13ம் தேதி அன்று வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.
மேலும், வேட்டி மற்றும் சேலையும் பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படுகிறது. இந்நிகழ்வில், செங்கல்பட்டு சப்-கலெக்டர் நாராயண சர்மா, செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளர் வே.நந்தகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ரேணுகாம்பாள், மாவட்ட வழங்கல் அலுவலர் கே.சாகிதாபர்வீன், செங்கல்பட்டு சரக துணைப்பதிவாளர் உமா சங்கரி, பொது விநியோக திட்ட துணை பதிவாளர் சாவித்திரி மற்றும் அரசு துறை அலுவலர்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள், குடும்ப அட்டைதாரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
The post செங்கல்பட்டு மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.