செங்கல்பட்டு மாவட்டத்தில் நகராட்சிகளாகும் திருப்போரூர், கேளம்பாக்கம்

2 months ago 20

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், கேளம்பாக்கம் இரண்டு நகராட்சிகளாக உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பேரூராட்சியுடன் தண்டலம், ஆலத்தூர், தையூர், பையனூர் ஆகிய நான்கு ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்மூலம், தற்போது திருப்போரூர் பேரூராட்சியில் 13,666 என உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 37,280 ஆக உயரும். அதேபோன்று, திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியுடன் படூர், புதுப்பாக்கம், நாவலூர், சிறுசேரி, தாழம்பூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டு புதியதாக கேளம்பாக்கம் நகராட்சி உருவாக்கப்பட உள்ளது. இதனால், இந்த நகராட்சியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 26,521 ஆக உயரும். முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களான ஏகாட்டூர், வாணியஞ்சாவடி,

கழிப்பட்டூர் ஆகியவையும் கேளம்பாக்கம் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. முட்டுக்காடு ஊராட்சியின் முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம் ஆகிய இரண்டு கிராமங்களும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இந்த கிராமங்களும், கானத்தூர், கோவளம் ஆகிய இரண்டு ஊராட்சிகளும் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. இதுகுறித்து திட்ட முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டு அடுத்த உள்ளாட்சி தேர்தலில் இருந்து நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. அதேபோன்று, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை, வடநெம்மேலி, நெம்மேலி, பட்டிபுலம் ஆகிய ஊராட்சிகளும் மாமல்லபுரம் நகராட்சியுடன் இணைக்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் ஓஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலை ஆகியவற்றில் ஊராட்சிகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் நகராட்சிகளாகும் திருப்போரூர், கேளம்பாக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article